சென்னை அண்ணா நகர் 5ஆவது அவென்யூ தெருவில் வசித்து வருபவர்கள் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி சஞ்சய் குப்தா - வினிதா குப்தா. இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். அண்ணா நகர் ரவுண்டானா அருகே வீட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் தொழில் மேம்பாட்டிற்காகக் கடந்த 2015ஆம் ஆண்டு அண்ணாநகர் பேங்க் ஆப் இந்தியா கிளையில் தாங்கள் வசித்து வரும் வீட்டை அடமானம் வைத்து, வினிதா குப்தா பெயரில் 75 லட்சம் ரூபாயை வர்த்தக கடனாக பெற்றுள்ளனர்.
கடன் வாங்கிய நாள் முதலே சரிவர வட்டி செலுத்தாமல் சஞ்சய் குப்தா தம்பதியினர் இருந்து வந்துள்ளனர். பல முறை வங்கி நிர்வாகம் எச்சரித்தும் தொடர்ந்து வட்டி செலுத்தாமல் இருந்ததால், 1 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சென்றதால், சஞ்சய் குப்தா அடமானமாக வைத்த அண்ணா நகர் வீட்டை ஜப்தி செய்வதற்கான நடவடிக்கையில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டது. கடந்தாண்டு அக்டோபர் மாதம் எழும்பூர் நீதிமன்றத்தில் ஜப்தி செய்வதற்கான உத்தரவைப் பெற்று வங்கி அதிகாரிகள் வீட்டை பூட்டி நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கடன் வசூலிக்கும் நிறுவனம், ஜப்தி செய்யப்பட்டுள்ள அண்ணா நகரில் உள்ள வீட்டில் பொருட்களைப் பறிமுதல் செய்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வீட்டின் அறையில் 12 குண்டுகளுடன் கூடிய இரண்டு கைத்துப்பாக்கிகள் இருப்பதை கண்ட வங்கி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் உடனடியாக இது குறித்து அண்ணா நகர் காவல் துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், இரண்டு கைத்துப்பாக்கி மற்றும் 12 குண்டுகளைப் பறிமுதல் செய்தனர்.