சென்னை:செங்கல்பட்டு பழைய மகாபாலிபுரம் சாலையில் உள்ள சிறுசேரியில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த மாணவர் , தனது அம்மா, தங்கையுடன் தங்கி அங்குள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவருகிறார்.
இவர்களுடைய விசா நீட்டிப்பு சம்பந்தமாக டெல்லியில் உள்ள கொலம்பியா தூதரகத்தில் சான்றிதழ் வாங்குவதற்காக மாணவர், சென்னையில் இருந்து டெல்லிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்ய ஆயத்தமானார்.
அப்போது, அவரை பரிசோதித்த பாதுகாப்பு அலுவலர்கள், அவரின் பர்சில் துப்பாக்கி குண்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து, துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்து மாணவரை, விமான நிலைய காவலர்களிடம் பாதுகாப்பு படை அலுவலர்கள் ஒப்படைத்தனர். மாணவரிடம் நடத்திய விசாரணையில், தனது நண்பரின் தாத்தா உரிமம் பெற்று துப்பாக்கி பெற்றிருந்ததாகவும், அவர் இறந்தபின்பு அவருடைய குடும்பத்தார் துப்பாக்கியை ஒப்படைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரண்டு துப்பாக்கி குண்டுகளை எடுத்துவைத்திருந்த தனது நண்பன் ஒரு குண்டை தன்னிடம் கொடுத்துவைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். மாணவர் கூறுவது உண்மை என உறுதி செய்த காவல்துறையினர் அவரை மன்னித்துவிட முடிவு செய்தனர்.
மாணவர் அறியாமல் தவறை செய்ததாலும், பள்ளி மாணவராக இருக்கும் அவரின் எதிர்கால நலன்கருதியும், குண்டு தவறுதலாக வெடித்திருந்தால் ஏற்பட்டிருக்கும் ஆபத்துகள் குறித்து தெளிவாக எடுத்துக்கூறிய காவல்துறையினர் மாணவரிடம் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிய பின்பு விடுவித்தனர்.
இதையும் படிங்க:நான்கு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்!