சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர், பாண்டி லட்சுமி (23). இவர் மடிப்பாக்கம் பிள்ளையார் தெருவில் உள்ள ஆப்டிகல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி ஆப்டிகல் கடைக்கு வந்த இருவர், கண்ணாடியை கேட்டுக்கொண்டே இருந்தபோது, திடீரென ஒரு நபர் பாண்டிலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 1.5 சவரன் செயின் பறிப்பில் ஈடுபட்டு, இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இதுபோன்று செயின் பறிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பரங்கிமலை துணை ஆணையர் தீபக் சிவாஜ் தனிப்படையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பித்தனர். செயின் பறிப்பு சம்பவம் நடந்த இடத்தில் இருந்து கொள்ளையர்கள், இருசக்கர வாகனத்தில் சென்ற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வு செய்தபோது மேடவாக்கம் சந்திப்பில் ஹோட்டல் ஒன்றில் கொள்ளையர்கள் செல்போனில் பேசிக் கொண்டிருந்த காட்சிகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து செல்போன் சிக்னல்கள் மூலமாகவும், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டபோது காஞ்சிபுரம் தனியார் விடுதி ஒன்றில் செயின் பறிப்பு சம்பவம் நடந்த நாள்களுக்கு, முந்தைய நாளிலிருந்து ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை தங்குவதற்கு கொள்ளையர்கள் பணம் செலுத்தி இருந்தது தெரியவந்துள்ளது. அந்த விடுதியில் தங்கி கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து மேடவாக்கம் சந்திப்பிலும், கொள்ளையர்கள் தங்கியிருந்த காஞ்சிபுரம் தனியார் விடுதியிலும் 'டவர் டம்ப்' என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, கொள்ளையர்கள் யார் யாருக்கு பேசியுள்ளார்கள் என்ற செல்போன் எண்களின் பட்டியலை தனிப்படை காவல் துறையினர் கண்டறிந்தனர். குறிப்பாக கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண் - ஏழு விதமான செல்போன்களில் பயன்படுத்தப்பட்டதும், அதன் ஐஎம்இஐ நம்பரையும் தனிப்படை காவல் துறையினர் சேகரித்தனர். இதனைத் தொடர்ந்து அந்த கொள்ளையர்கள் தொடர்பு கொண்ட 19 செல்போன் எண்களின் பெயர் மற்றும் முகவரிகளை காவல் துறையினர் சேகரித்தனர்.
இந்நிலையில் தொடர்ந்து தனிப்படை காவல் துறையினர் 800க்கும் மேற்பட்ட சிசிடிவிகளை ஆய்வு செய்தபோது பெங்களூரு விமான நிலையம் வரை கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அங்கு இருக்கும் பெங்களூரு காவல் துறையினர் உதவியுடன் விசாரணை மேற்கொண்டதில் பெங்களூரு விமான நிலையத்தில் செயின் பறிப்பு கொள்ளைக்காக பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனத்தை, விமான நிலையம் அருகே நிறுத்தி வைத்து விட்டு, கடந்த மாதம் 16ஆம் தேதி மத்தியப் பிரதேசத்திற்கு விமானம் மூலம் கொள்ளையர் ஒருவன் சென்றது தெரியவந்தது.
இதே நேரத்தில் மற்றொரு கொள்ளையன் எங்கெங்கு செல்கிறான் என்கிற சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கிருஷ்ணகிரி மாவட்டம் வரை சென்றது தெரியவந்தது. கொள்ளையர்கள் பயன்படுத்திய ஐஎம்இஐ நம்பர் மூலமாக வேறு புதிய புதிய சிம் கார்டுகளை பயன்படுத்திய போதெல்லாம் காவல் துறையினர் செல்போன் சிக்னல் மூலமாக கொள்ளையர்கள் செல்லும் இடத்தை கண்டுபிடித்துக் கொண்டிருந்தனர். இறுதியாக இம்மாதம் 1ஆம் தேதி கொள்ளையர்கள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று, மும்பையில் இருந்து ஹைதராபாத்திற்கு பயணித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
ஆனால், திடீரென இரண்டாம் தேதி கொள்ளையர்களின் செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மறுபடியும் காவல் துறையினர் வசம் இருக்கும் ஐஎம்இஐ நம்பர் உடைய செல்போன்களில் புதிய சிம் கார்டுகள் போடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து, அந்த செல்போன் எண்ணைத் தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது, ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு ரயில் மூலமாக அந்த செல்போன் எண் பயணப்பட்டுக் கொண்டிருப்பதை சைபர் கிரைம் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
அதே நேரத்தில் மற்றொரு கொள்ளையன் பயன்படுத்திய செல்போன் எண் ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு பயணித்திருப்பதும் கண்டுபிடித்தனர். இந்த இரண்டு கொள்ளையர்களின் செல்போன் நம்பர்களில் கால் அழைப்புகளை ஒரு சேர வைத்து காவல் துறையினர் கண்காணிக்கும்போது, பெங்களூரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்ளைக்காக பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையே பயன்படுத்தி இரண்டு கொள்ளைகளும் ஒரே நேரத்தில் பயணித்துக் கொண்டிருப்பது செல்போன் சிக்னல் மூலமாக தனிப்படை காவல் துறையினருக்கு உறுதியானது.
இதனையடுத்து செல்போன் சிக்னல்களை அடிப்படையாக வைத்து தனிப்படை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். குறிப்பாக செல்போன் சிக்னல் கர்நாடகா மாநிலத்தின், ராமநகராவில் உள்ள மண்டிபட் குனிக்கல் பிரதான சாலையில் இருப்பதை உறுதி செய்த தனிப்படை காவல் துறையினர் இரண்டு கொள்ளையர்களையும் இருசக்கர வாகனத்தோடு சுற்றி வளைத்து பிடித்தனர். பிடிபட்ட இரண்டு கொள்ளையர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் ஈரானிய கொள்ளையர்கள் என்பது தெரியவந்தது.