சென்னை: நேஷ்னல் ஹெரால்டு பத்திரிக்கை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதை கண்டித்தும், டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலக முகப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதை கண்டிக்கும் விதமாகக் காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, மத்திய பாஜக அரசின் மோசமான போக்கை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று (ஜூன்.16) தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் - கே.எஸ். அழகிரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிலையில் அனுமதி பெறாமல் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி, அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் செல்வபெருந்தகை, முன்னாள் தலைவர் தங்கபாலு உட்பட 277 பேர் மீது கிண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாகக் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உட்பட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நேஷனல் ஹெரால்டு வழக்கின் வரலாறும்... முழுப் பின்னணியும்...