சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் உள்ள நபர்களை கண்காணிக்க சென்னை மாநகராட்சியின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள களப்பணியாளர்கள் பின்பற்றவேண்டிய வழிமுறைகள், அவர்களின் அன்றாட பணிகள் குறித்து நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஒரு வார்டுக்கு 5 பேர் வீதம், 200 வார்டுகளுக்கு ஆயிரம் நபர்கள் களப் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு களப்பணியாளரும், அறிகுறிகள் ஏதும் இல்லாமல் அல்லது லேசான அறிகுறிகளுடன் தொற்று பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 45 வயதிற்கு உட்பட்டவர்கள் வீட்டு தனிமையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நோயாளிகளுக்கு மஞ்சள் பை
அவ்வாறு வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கு வீட்டில் காற்றோட்டமுள்ள தனி அறை, தனி கழிப்பிட வசதி இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். இவர்கள் ஐந்து நாட்கள் வீட்டு தனிமையில் இருக்க வேண்டும். களப்பணியாளர்கள் நாளொன்றுக்கு ஒரு முறை தொற்று பாதித்த நபர்களின் வீட்டிற்கு சென்று, அவர்கள் உடல்நலம் குறித்து விசாரித்து தகவல்களை சேகரிக்க வேண்டும்.
தொற்று பாதித்த நபர்களுக்கு காய்ச்சல் உள்ளதா எனவும், சுவாச அளவினை ஆக்ஸிமீட்டர் கொண்டும் கண்டறிய வேண்டும். வீட்டு தனிமையில் இருக்கும் தொற்று பாதித்த நபர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான மளிகை சாமான்கள், உணவு, இதர பொருட்களை களப்பணியாளர்கள் ஏற்பாடு செய்து தரவேண்டும். ஒவ்வொரு தொற்று பாதித்த நபருக்கும் தேவையான விட்டமின், சிங்க், காய்ச்சலுக்கு தேவையான மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையின்பேரில் கொடுக்க வேண்டும்.
நோயாளிகள் உபயோகித்த பொருட்களை பாதுகாப்பாக எடுத்துச் செல்ல ஏதுவாக அவர்களுக்கு மஞ்சள் பைகளை வழங்க வேண்டும். அவர்கள் பயன்படுத்திய பொருட்களை அந்த மஞ்சள் பையில் தனியாக சேகரித்து இல்லங்களுக்கு வரும் தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க அறிவுறுத்த வேண்டும்.