சென்னை:பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், அம்மன் நகர் பகுதியில் உள்ள சுடுகாடு பகுதியில், இளைஞர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஈடுபட்ட இளைஞர்கள் போதையில் இரண்டு இளைஞர்களை தாக்கி உள்ளனர். இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் இளைஞர்களை தாக்கியதை, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் வீடியோவாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளளார்.
அந்த வீடியோவில், இரண்டு இளைஞர்களை சூழ்ந்து கொண்டு நிற்கும் நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று கையில் பிரம்பு வைத்து ஒருவரை சரமாரியாக தாக்குவதும், ஒருவர் எட்டி உதைக்க முயல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. பிரம்பால் தாக்கும்போது, அந்த நபர் வலியால் துடிப்பது போன்ற காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, பூந்தமல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினரைக் கண்டதும், அங்கிருந்த இளைஞர்கள் ஓட்டம் பிடித்துள்ளனர். எனவே, அந்த நபர்களை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.