குரூப் 4 தேர்வு முறைகேட்டில் இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டு தகுதி நீக்கம் செய்யப்பட்டபோதும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான தேர்வர்கள் மட்டுமே தற்போது வரை கைதாகி இருக்கின்றனர். முக்கியமான இடைத்தரகர் ஜெயக்குமார் இன்னும் கைதாகவில்லை.
இந்த முறைகேட்டின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கின்றனர் என்ற தகவலும் வெளியாகவில்லை. ஓம் காந்தன், மாணிக்கவேலுவுடன் தொடர்பு உடையவர்கள் யார் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
பல்வேறு துறைகளில் பணியாற்றிவரும் முதல் 42 பேரும், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், சார்பதிவாளர் அலுவலகங்கள், தலைமைச் செயலகம் என பசையுள்ள அலுவலகங்களில் பணியாற்றி வருவது முதல் கட்டமாக கைதாகியுள்ள 9 தேர்வர்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று சிபிசிஐடி அலுவலர்களிடம், தேர்வாணையம் புகார் அளித்த நிலையில், தற்போது வரை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த விக்னேஷ், திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்த சுதாராணி, குரூப் 4, குரூப் 2 ஏ முறைகேட்டில் முக்கிய குற்றவாளியாக இருக்கக்கூடிய சித்தாண்டியின் சகோதரர் காரைக்குடி பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த வேல்முருகன், நெல்லை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஜெயராணி உள்ளிட்ட 8 பேரில் மேலும் ஒரு அலுவலருடன் சேர்த்து 9 பேர் கைதாகியுள்ளார்.
இவர்களைப் போல் மற்ற அனைவருமே, அதாவது 42 பேருமே மிக முக்கியமான துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்பது இதன் மூலம் உறுதியாகியிருக்கிறது. அவர்கள் எந்தெந்த துறைகளில் பணியாற்றி வருகிறார்கள் என்ற பட்டியலும் தேர்வாணையத்திடம் இருக்கிறது.