தமிழ்நாட்டில் இன்று (மே.31) காலை 6 மணி முதல் ஜூன்7ஆம் தேதி காலை 7 மணி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு, மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தமிழ்நாடு அரசு சில தளர்வுகளையும் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, நடமாடும் மளிகைக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மளிகைப் பொருட்களை, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடை உரிமையாளர்கள் வாகனங்கள், தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சியின் அனுமதியுடன் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆன்லைன், தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர்கள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகை, காய்கறி, பழங்களை வாங்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நடமாடும் மளிகைக் கடை திட்டம்! அதன்படி, சென்னை மாநகராட்சியிலும், இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க தொழில் உரிமம் பெற்ற 7,500க்கும் மேற்பட்டவிற்பனையாளர்களின் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி சீட்டு மற்றும் டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றை மாநகராட்சி மண்டல அலுவலகம், வருவாய் அலுவலகம், வார்டு அலுவலகம் போன்றவற்றில் வழங்கப்பட்டன. நேற்று(மே.30) வரை 2,197 வியாபாரிகள் அனுமதி பெற்று இருந்தனர். இந்த நடமாடும் மளிகைக் கடையில் அரசி, பருப்பு வகைகள், மசாலா பொருட்கள் முதலியவை விற்கப்படுகின்றன.
டன்சோ, சூப்பர் டெய்லி, பிக் பேஸ்கட் உள்பட பல செயலிகள் மூலம் ஆர்டர் செய்து மளிகைப் பொருட்களை பொது மக்கள் வாங்கிக் கொள்ளலாம்.