சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களிலும் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. ஒரு சில வீடுகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என முறையாக தரம் பிரித்து வழங்கப்படுகின்றன. சில வீடுகளில் அவ்வாறு குப்பைகள் தரம் பிரித்து வழங்கப்படுவது இல்லை.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெறப்படும் தரம் பிரிக்கப்படாத குப்பைகள் மாநகராட்சியின் வள மீட்பு மையங்களில் (RRC) பிரித்தெடுக்கப்பட்டு மக்காத உலர்க்கழிவுகள் மறுசுழற்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. பெறப்படும் குப்பைகளில் மக்கும் ஈரக்கழிவுகள் உரம் தயாரிக்கும் மையங்களில் உரமாகவும், எரிவாயு மையங்களில் உயிரி எரிவாயுவாகவும் (Bio CNG) மறுசுழற்சி செய்யப்படுகிறது.
15 நாட்கள் அவகாசம்:இந்த நிலையில் குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு குப்பைகளை கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2019இன் படி குப்பைகளை பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பைகளாக பிரித்து அன்றாடம் வழங்க வேண்டும்.