பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறுவிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகளைக் கொட்டுவதாகவும் கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களிலிருந்து கட்டட கழிவுகள் பொது இடங்களிலும், சாலைகளின் ஓரங்களிலும் கொட்டப்படுவதாகவும் மாநகராட்சிக்குப் பல்வேறு புகார்களின் வாயிலாகத் தெரியவந்துள்ளது.
சென்னை மாநகரைத் தூய்மையாகப் பராமரிக்கும் வகையில் பொது, தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்கள் மீதும் - கட்டுமான கழிவுகளைப் பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுபவர்கள் மீதும் - நீர்நிலைகள், நீர்வழித்தடங்களில் குப்பைகளை எறிபவர்கள் மீதும் மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 209இன்படி கீழ்கண்டவாறு அபராதம் விதிக்கப்படும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அதன்படி பொது, தனியார் இடங்களில் குப்பைகளைத் தூக்கி எறிபவர்கள், வாகனங்களிலிருந்து குப்பைகளைக் கொட்டுபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
தரம் பிரிக்காமல் குப்பையைக் கொட்டும் தனிநபர் இல்லங்களுக்கு ரூ.100, அடுக்குமாடி குடியிருப்பு என்றால் ரூ.1,000, பெருமளவு குப்பைகளை உருவாக்குபவர்கள் என்றால் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது.