சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், நிர்வாக ரீதியாக 15 மண்டலங்களும், 200 வார்டுகளும் உள்ளன. அவற்றில், மாநகராட்சிக்கான நிதி ஆதாரமாக, பொதுமக்களிடம் இருந்து சொத்து வரி மற்றும் தொழில் வரி ஆகியவை வசூலிக்கப்பட்டு வருகின்றன. சொத்து வரியினை முறையாகச் செலுத்த வேண்டும் என்பதற்காக வாட்ஸ் அப், பெருநகர சென்னை மாநகராட்சி நிறுவி உள்ள அறிவிப்புப் பலகைகள் (Vishual Media Display), திரையரங்குகளில் விழிப்புணர்வு படம் ஒளிபரப்புதல், குப்பை அகற்றும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கி மற்றும் பண்பலை அலைவரிசை ஆகியவை மூலம் சொத்து வரி செலுத்த மாநகராட்சி கோரிக்கை வைத்து வருகிறது.
கடந்த ஆண்டிற்கு முந்தைய நிதி ஆண்டைப் (2021 - 2022) பொறுத்தவரையிலும், சொத்து வரி 778.07 கோடி ரூபாயும், தொழில் வரி 462.35 கோடி ரூபாயும் என மொத்தமாக 1,240.42 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. இந்த நிலையில் 2023 - 2024ஆம் நிதி ஆண்டிற்கு சொத்து வரி ஆயிரத்து 680 கோடி ரூபாயும், தொழில் வரி 500 கோடி ரூபாயும் வசூலிக்க மாநகராட்சி இலக்கு வைத்துள்ளது.