சென்னை:பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை, தலைமையிடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தில் (ICCC) கண்காணிக்கப்படுவதை மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
இது குறித்து மேயர் ஆர்.பிரியா கூறுகையில், "பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மண்டலங்கள் வாரியாக மழைநீர் வடிகால்களில் சுமார் 1500 மீட்டர் நீளத்திற்குத் தூர்வாரும் பணிகள் முதற்கட்டமாகத் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது, இரண்டாம் கட்டமாக பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒப்பந்ததாரர்கள் அனைவரும் மழைக்காலம் வரும் முன் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் விழும் மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் வகையில் வாகனங்களில் பொருத்தப்பட்ட 6 மர அறுவை இயந்திரங்கள், கையினால் இயக்கப்படும் 264 மர அறுவை இயந்திரங்கள், 8 மின் மர அறுவை இயந்திரங்கள் உள்ளன.
மண்டலங்களில் மர அறுவை இயந்திரங்கள் தேவைப்படும் பகுதிகளில், வாடகை முறையில் எடுத்து பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழையினை முன்னிட்டு, இதுவரை 2000 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளாகக் கண்டறியப்பட்டுள்ள, சுமார் 109 இடங்களில் மழை அதிகமாகப் பெய்யும் பொழுது, காவல்துறை மற்றும் மீன்வளத்துறையுடன் இணைந்து நிவாரணப் படகுகள் மூலமாகப் பொதுமக்களை மீட்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.