சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சியில் முதற்கட்டமாக சூரிய சக்தியுடன் இயங்கக்கூடிய, சுற்றுச்சுழலுக்கு பாதிப்பு இல்லாமல் இருக்கும் கழிப்பறைகளைக் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை மாநகரம் பல வளர்ச்சிப் பாதைக்குச் சென்றாலும், கழிப்பறை பிரச்சனை இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பிரச்னையை சிறந்த முறையில் கையாளும் விதமாக, சென்னையில் பல்வேறு இடங்களில் நவீன கழிப்பறை கட்டுவதற்காக, சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் இணைந்துள்ளது. அதேநேரம், சுற்றுச்சூழலின் பாதிப்பைக் குறைப்பதற்கும், நவீன முறையில் சுற்றுசுழலுக்கு பாதுகாப்பாக 200க்கும் மேற்பட்ட கழிப்பறை கட்டப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்த தகவலின்படி, “சென்னையில் தற்போது 280 பொது கழிப்பறைகள் உள்ளன. இதில் புதியதாக 90 கழிப்பறைகள் இணைந்து, மொத்தம் 370 கழிப்பறைகளாக இருக்கும். இந்த புதிய கழிப்பறைகள், முதல்கட்டமாக சென்னையில் உள்ள திரு.வி.க நகர், மெரினா கடற்கரை, ராயபுரம் உள்ளிட்ட 90 இடங்களில் கட்ட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த 90 புதிய கழிப்பறைகள் முழுவதும் சூரிய சக்தியில் இயங்கும் விதமாக சுற்றுச்சுழலுக்கு பாதுகாப்பான முறையில் கட்டப்படும்.
நவீன கழிப்பறைகளின் வசதிகள்:இந்த கழிப்பறைகள் சூரிய சக்தியில் இயங்கும். மேலும், போதிய அளவில் காற்றோட்டம் மற்றும் பகலில் சூரிய வெளிச்சம், மழைநீர் சேகரிப்பு குழாய்கள் என இருக்கும். மூன்றாம் பாலினத்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக கழிப்பறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.