சென்னை நிருபர் சங்கத்தில் பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பாக 40க்கும் மேற்பட்ட அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கூறுகையில், "பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு நீதி அல்ல, தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பள்ளி கல்லூரிகளில் மதத்தின் பெயரால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார்கள். இதனைத் தடுக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளுவரைக் காவிமயம் ஆக்குவதற்குப் பாசிச எதிர்ப்பு அமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது. அதேபோல், காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டு மக்களின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். பாஜக அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் பாசிச நடவடிக்கையாக இருக்கிறது.