தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிராம சபைக்கு அதிகாரம் வேண்டும்: உண்ணாவிரதப் போராட்டம்

சென்னை: மதுக்கடைகள் வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சபைகளுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

போராட்டம்
போராட்டம்

By

Published : Feb 17, 2020, 9:08 PM IST

Updated : Feb 17, 2020, 9:54 PM IST

கிராம ஊராட்சிகளை வலுப்படுத்த இயங்கி வரும் ‘தன்னாட்சி’ அமைப்பு சார்பில், சேப்பாக்கத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. கடந்த மாதம் 21ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, டாஸ்மாக் கடைகள் அமைக்க முடிவெடுக்கும் அதிகாரத்தை பஞ்சாயத்து மற்றும் கிராம சபைகளுக்கு வழங்குவது குறித்து அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து மதுக்கடைகள் வேண்டுமா, வேண்டாமா என முடிவெடுக்கும் அதிகாரம் கிராம சபைகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

பின்னர் தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார் பேசுகையில், ”மதுக்கடைகள் விஷயத்தில் ஹரியானா, மகாராஷ்ரா மாநிலங்களில், கிராம சபைகளே முடிவெடுக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோல், தமிழ்நாட்டிலும் சட்டத் திருத்தம் வேண்டுமென வலியுறுத்தி, இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம். அரசே மதுக்கடைகளை ஏற்று நடத்தத் தொடங்கிய பின்பு, மதுவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, இது தொடர்பான உரிமையை கிராமங்களுக்கான சபைகளுக்கு வழங்கப்பட்டால் மக்களாகவே முடிவெடுக்க முடியும்” என்றார்.

முன்னதாக பேசிய டாக்டர் விதுபாலா, "புற்றுநோய்க்கான காரணங்களை கண்டறிய உலக சுகாதார நிறுவனம்(WHO-IARC) தீவிர முயற்சி எடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சிகளின் முடிவுகளின்படி நோய்க்கான காரணிகளை முதல் நான்கு நிலைகளாக பிரித்து தெரிவித்துள்ளது.

அதன்படி, முதல் காரணிகள் பட்டியலில் மதுவும் இடம் பெற்றுள்ளது. புகையிலைதான் முதல் காரணி என்று கருதி வந்த நிலையில் இப்போது மதுவும் முக்கிய காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

போராட்டம்

பிரசவத்தின்போது சிசு இறப்பைக் கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக கூறப்படுகிறது. ஆனால் அப்படி பிறக்கும் குழந்தைக்கு தந்தை உயிரோடு இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், டாஸ்மாக் மதுபானக் கடைகள் சமூகச் சீரழிவை ஏற்படுத்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்காரணமாக, 30 வயது முதல் 59 வயதுவரை உள்ள கணிசமானோர் தங்கள் உழைக்கும் திறனை இழந்துள்ளனர். குடிப்பழக்கம் உள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதற்கு காரணம் என்ன என்பதை கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள், கைக்கு எட்டிய தூரத்தில் மதுபானங்கள் கிடைப்பதைதான் சுட்டிக்காட்டுகின்றன.

ஒரு அரசு என்பது குடும்பத் தலைவருக்கு சமமானது. ஒரு அரசாங்கம் சாராயக்கடைகள் நடத்துவது ஒரு குடும்பத்தலைவர் தன் பிள்ளைகளுக்கு சாராய விற்பனை செய்வதற்கு சமம். இது ஒரு அவமானம், சமூக அவலம்.

அரசின் தொலைநோக்கு திட்டங்கள் ஒருங்கிணைந்த சமூக வளர்ச்சியை மையப்படுத்தி தீட்டப்படுகின்றன. கைக்கெட்டும் தூரத்தில் மதுபானக்கடைகளை திறந்து வைத்துக்கொண்டு ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டங்கள் எந்த வகையில் பயனளிக்கும்? ஒருங்கிணைந்த சமுதாய வளர்ச்சிக்கு மது விலக்கு அவசியம். அதை நோக்கிய நகர்வாக, பஞ்சாயத்து எல்லைக்குள் டாஸ்மாக் மதுக்கடைகள் வேண்டுமா? வேண்டாமா? என முடிவெடுக்கும் அதிகாரத்தை கிராம சபைக்கு வழங்க வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: ஏலியனுடன் ஜாலியாக குச்சி மிட்டாய் சாப்பிடும் சிவகார்த்திகேயன்!

Last Updated : Feb 17, 2020, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details