சென்னை: இதுகுறித்து தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ஆண்டுதோறும் நடத்தப்படும் கிராம சபைகளின் எண்ணிக்கை இவ்வருடம் 4-லிருந்து 6ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக, மார்ச் 22 அன்று உலக தண்ணீர் தினத்தன்று நடைபெற உள்ள கிராம சபைக் கூட்டத்திற்கான இடம், நேரம் ஆகியன கிராம ஊராட்சி அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு ஜல்சக்தி இயக்கத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள கருப்பொருள், ''குடிநீருக்கான ஆதாரத்தினை நிலைப்படுத்துதல் (Source sustainability of drinking water)'' ஆகும். உலக தண்ணீர் தினத்தில் நடைபெறும் கிராம சபையில் ஒவ்வொருவரும் நீரினைப் பாதுகாத்தல், பயன்பாட்டினைக் குறைத்தல் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீரினை சேகரித்தல் என்கிற விழிப்புணர்வுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் புதிய குடிநீர் ஆதாரங்களை உருவாக்குதல், பாரம்பரிய நீர் நிலைகளை புனரமைத்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் ஆகியவற்றிற்கு ஏதுவாக அனைத்து நீர் நிலைகளையும் கணக்கெடுத்து அதற்கான திட்டங்களை தீட்டுதல், சமூக காடுகள் வளர்த்தல் மற்றும் பல்வேறு திட்டச் செயல்பாடுகள் குறித்து விவாதங்கள் கிராம சபையில் நடைபெற வேண்டும்.
ஜல் ஜீவன் இயக்கத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்குதல், அதற்கான மக்கள் பங்கேற்புத் தொகை செலுத்துதல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். மேலும் 2023ஆம் ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அது குறித்த பொருளும் விவாதிக்கப்பட உள்ளது. இதன் மூலம் சிறுதானிய விவசாயம், குறைவான நீரில் அதிக விளைச்சல், சிறுதானியத்தினை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும்.
மேலும், கிராம ஊராட்சியில் சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், கடந்த ஆண்டிற்கான தணிக்கை அறிக்கை, தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கக பணிகள், கிராம ஊராட்சிகளில் அமைக்கப்பட்டு வரும் அதிவேக இணையதள வசதி மற்றும் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்களை தொடங்கும் திட்டம் ஆகியன குறித்து கிராம சபைக்கு தெரிவித்தல் ஆகியவை முக்கியப்பொருட்களாக உள்ளன.
மேலும், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம் - பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப் பணிகள் தேர்வு, கிராம வளர்ச்சி திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்புக்கு ஒப்புதல் முதலானவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை நடைபெறுவதை மாவட்ட அளவில், மாநில அளவில் கண்காணித்திட “நம்ம கிராம சபை” (Namma Grama Sabhai App) எனும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.
நாளை உலக தண்ணீர் தினத்தையொட்டி கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் - தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நாளை உலக தண்ணீர் தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெறும் என தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கிராம சபையில் பங்குபெற்றோர் எண்ணிக்கை, ஒப்புதல் பெற்ற தீர்மானங்கள், கலந்து கொண்ட அலுவலர்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் ஆகியன இந்த கைப்பேசி மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
எனவே, உலக தண்ணீர் தினத்தன்று நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் ஊரக வாழ் பொதுமக்கள் பெருவாரியாக கலந்து கொண்டு விவாதத்தில் பங்கு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வேளாண் பட்ஜெட் ஒரு மாயத்தோற்றம் - ஈபிஎஸ் குற்றச்சாட்டு