சென்னை: நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 685 கிராமப் பஞ்சாயத்துக்களிலும் ஒரு சில இடங்களைத் தவிர, பெரும்பாலான கிராமங்களில் கிராம சபைக்கூட்டங்கள் அமைதியான முறையில் நடைபெற்றன.
பொதுவாக கிராமசபைக்கூட்டங்களில் வரவு செலவு கணக்குகள் வெளியீடு, பல்வேறு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு மற்றும் பல்வேறு அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்கிற தலைப்புகளில் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு நடைபெறும் கிராம சபைக்கூட்ட விவாதங்கள், பயனாளிகள் தேர்வுகளில் ஈடுபடுதல் மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது, அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களும் கலந்துகொள்வது ஆகியவை அதன் முக்கிய கடமையாகும்.
முன்னதாக கிராம சபைக் கூட்டங்களில் சாதி ரீதியான நடவடிக்கைகள் இருக்கக்கூடாது எனவும்; பட்டியல் இன கிராம பஞ்சாயத்து தலைவர்களை தீண்டாமை என்ற பெயரில் அவர்களது பணிகளைத் தடுக்க கூடாது எனவும் தலைமைச் செயலாளர் இறையன்பு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இது சம்மந்தமாக அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதமும் எழுதியிருந்தார். இந்த நிலையில் அனைத்துக் கிராம பஞ்சாயத்துக்களிலும் இன்று கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒரு சில கிராம பஞ்சாயத்துக்களில் மனுக்கள் பெறுவதில் வாக்கு வாதங்கள் அரங்கேறின.
கோயம்புத்தூர் மாவட்டம், தீத்திபாளையம் ஊராட்சியில் நடந்த கிராம சபைக்கூட்டத்தில் மக்களுடைய மனுக்களை கிராம ஊராட்சித் மன்றத் தலைவர் வாங்க மறுத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு அரசு அலுவலர்கள் விரைந்து சென்று நடவடிக்கை எடுத்தனர்.
இதையும் படிங்க: புதிய சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. ஏகனாபுரம் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றம்