தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் - உயர் நீதிமன்றம் - CCTV, GPS

சென்னை: மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஒரு மாதத்திற்குள் ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Chennai HC

By

Published : Jul 26, 2019, 4:16 PM IST

கோவையில் சமீபத்தில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவி ஒருவரை வாகன ஓட்டுநர், அவரது உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் அனைத்துப் பள்ளி வாகனங்களிலும் சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடக்கோரி சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த கோபி கிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களின் பயணத்தை பெற்றோர்கள் இணையதளம் மூலமாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பள்ளிக் கல்வித் துறை செயலாளர் இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், அனைத்து தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களும், ஜிபிஎஸ் கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் கண்காணிப்பு கேமராக்களும், ஜிபிஎஸ் கருவிகளும் எல்லா நேரங்களிலும் சீராக இயங்கும் நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பள்ளி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்தக் கருவிகளின் மூலம் பள்ளி வாகனங்களில் போக்குவரத்தை கண்காணிக்க அனைத்து தனியார் பள்ளிகளிலும் கட்டுப்பாட்டு அறை அமைக்க வேண்டும் எனவும், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஒரு மாதத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்தும் நடைமுறையை முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details