காங்கிரஸில் இருந்து விலகி வந்து தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்ட குஷ்பு, பாஜக ஆதரவாளரான கவுதமி ஆகிய இருவரும் ஆளுக்கொரு சட்டப்பேரவைத் தொகுதியை தேர்ந்தெடுத்து தீவிரமாக பணியாற்றி வந்தனர். சேப்பாக்கம் தொகுதியில் குஷ்புவும், ராஜபாளையம் தொகுதியில் கவுதமியும் கட்சிப் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், சேப்பாக்கம், ராஜபாளையம் தொகுதிகள் முறையே அதிமுக, பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் கவுதமி, குஷ்பு ஆதரவாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். ராஜபாளையம் தொகுதி அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான தனது ஆதங்கத்தை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கவுதமி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் உங்கள் வீட்டு மகளாக, சகோதரியாக உங்களில் ஒருவராக என்னை பாவித்து கடந்த 5 மாதங்களாக தங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்தீர்கள். என்றும் எனக்கு நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு தலைவணங்கி, உங்களுக்கு கட்டுப்பட்டிருக்கிறேன். உங்கள் அன்பின் வாயிலாக கிடைத்த இந்த உறவானது என்றும் நிலைத்திருக்கும் என உறுதியளிக்கிறேன். நீங்கள் எவ்வாறு உயர்வான வாழ்க்கையை வாழ வேண்டுமோ அதற்காக உங்களுடன் என்றும் பாடுபடுவேன் என குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட்டில் பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரையும் டேக் செய்துள்ளார்.
அதேபோல் குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு உண்மைத் தொண்டராக சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவை தொகுதிக்கு நான் தரை மட்டத்தில் கடுமையாக உழைத்து வருகிறேன். அந்தத் தொகுதி மக்கள் என் மீது பொழிந்த அன்பு, பாசம், மரியாதை உண்மையானது தூய்மையானது. நான் எப்போதுமே அவர்களுக்கு கடன்பட்டிருப்பேன். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் மகிழ்ச்சியைச் சேர்ப்பதற்கும் எனது கடமையை தொடர்ந்து நிறைவேற்றுவேன். நான் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டப்பேரவைத் தொகுதியின் பொறுப்பாளராக இருந்தேன். நான் ஒருபோதும் வேட்பாளர் என்று சொல்லவில்லை. இந்தப் பணியை செய்ய எனக்கு வாய்ப்பளித்தற்கு நன்றி என பிரதமர் மோடி, அமித் ஷா ஆகியோரை டேக் செய்திருந்தார்.
குஷ்பு, கவுதமியும் ஓயாது பணியாற்றிய தொகுதிகளில் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படாதது, அவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.