சென்னை: இந்திய தொழில்நுப்ட கழகம் (ஐஐடி), தேசிய தொழில்நுட்ப கழகம் (என்ஐடி) போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வில் தேர்ச்சி பெற தமிழ்நாடு முழுவதும் உள்ள 274 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் விழா சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் நடைபெற்றது.
மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் உதயநிதி, "பள்ளிகளின் தரத்தை உயர்த்தி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
மாணவர்களுக்கு கல்வி முழுமையாக கிடைப்பதற்கு இலவச பேருந்து பயணத்தை இலவச பாட புத்தகம் சீருடை போன்றவற்றையும் வழங்கினார். படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் டைட்டில் பார்க், ஸ்ரீபெரும்புதூரில் கார் உற்பத்தி ஆலை போன்றவற்றை கொண்டு வந்தவர்.
அவரின் வழியில் நமது முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து மாணவர்களின் மீது அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 19,000 கோடியும், பள்ளிக் கல்வித் துறைக்கு 39 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு 150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நான் செல்லும் நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன் உரையாடி அவர்களிடம் இருந்து கற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் உங்களுக்கு தேவையானதை செய்து தர தாயாகவும் தந்தையாகவும் முதலமைச்சர் இருக்கிறார்.
முதலமைச்சர் கூறுவது போல் கல்வி மட்டுமே யாராலும் திருட முடியாத செல்வம். தற்போது வந்துள்ள மாணவர்கள் சிறப்பாக படித்து, வரும் கல்வி ஆண்டில் அதிக அளவில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு வழிகாட்டியாக அமைய வேண்டும்" என்று தெரிவித்தார்.