சென்னை:சமீபகாலமாக அரசுப் பள்ளி மாணவர்கள் வன்முறை சம்பவங்களின் ஈடுபடுவது அதிகமாகிவிட்டது. சமூக வலைதளங்களில், அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சமீப காலமாக ஆசிரியரை மிரட்டுவது, மேசைகளை உடைப்பது, செல்போன்களைப் பயன்படுத்துவது, மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது போன்ற வீடியோக்கள் அதிகம் உலா வருகின்றன.
ஒருதரப்பு கரோனா போன்ற பெருந்தொற்று காலத்திற்கு பிறகு வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு நன்னெறி வகுப்புகளை நடத்தாமல் இருந்ததும், சிந்தனையை மாற்றும் வகையில் விளையாட்டு, உடற்பயிற்சி உள்ளிட்டவைக்கு அனுமதி அளிக்காமல் இருந்ததுமே காரணம் என்று தெரிவிக்கிறது.
மற்றொரு தரப்பு, மாணவர்களின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது என்று ஆசிரியர்களிடம் கூறுவதும், அவர்களை சரியாக கண்காணிக்காமல் விட்டுவிடுவதுமே இதுபோன்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது என்கிறது.
தீர்வுகள் என்ன..?
இதற்கான தீர்வுகள் குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் மருத்துவர் சத்தியமூர்த்தி கூறுகையில், “இளம் பருவத்தினர் தாங்கள் செய்வது தவறு என்பதே புரியாமல் செய்துவருகின்றனர். பெரியோர்கள் போல் ஆன்ட்ராய்ட் செல்போன் பயன்படுத்துதல், இருசக்கர வாகனங்களை ஓட்டுதல் உள்ளிட்டவையை செய்வதால் தாங்கும் அப்படியே என்று நினைத்துக் கொள்கின்றனர்.
பெற்றோர்கள் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவதை கண்காணிக்க வேண்டும். தோலுக்கு மேல் வளர்ந்த பிள்ளைகளுக்கு தோழானாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பு முக்கியம். அதேபோல பெற்றோர் தங்களது பிள்ளைகளின் நடவடிக்கை குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக ஆசிரியர்கள், பெற்றோர் சந்திப்பு கூட்டம் நடத்துவதுடன், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும். மாணவர்களின் கல்விக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல், ஒழுக்கத்திற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். மாணவர்களின் எதிர்காலம் கருதியும், தவறுகள் செய்தால் அளிக்கப்படும் தண்டணைகள் குறித்தும் எடுத்து கூற வேண்டும். மாணவர்கள் வீட்டில் பெற்றோர்கள் கண்காணிப்பிலும், பள்ளியிலும் ஆசிரியர்கள் கண்காணிப்பிலும் தொடர்ந்து இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மாணவர்களின் கையில் செல்போன் கொடுக்க வேண்டிய சூழலில் உள்ளோம்
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனை மன நலப்பிரிவு மருத்துவர் சாந்தி கூறும்போது, “வளரும் பருவ வயதினர், குழந்தையும் அல்லாத, வளர்ந்தோரும் அல்லாத ஒரு பருவம். இந்த பருவத்தில் உடல் மற்றும் மூளையின் நரம்புகள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும்.
இதனால் முடிவு எடுக்கும் திறன் குறைவாகவே இருப்பதால், உணர்ச்சிகளுக்கு அடிமையாகி உடனடியாக முடிவு எடுக்கின்றனர். சமூகத்தில் தங்களுக்கான தனி அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில், படிப்பில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கிறது. இதன் காரணமாகவே, தன்னை ஹீரோ போல் நினைத்துக்கொண்டு சில செயல்களில் ஈடுபடுகின்றனர். கரோனா தொற்று காரணமாக சிலவற்றில் தொழில்நுட்பத்தை பிரித்து பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
கல்விக்கும் தொழில்நுட்பத்திற்கும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நிலை இருந்தது. இந்த தொழில்நுட்பம் ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் புதியதானது. 3 ஆண்டிற்கு முன்னர் குழந்தைகளிடம் செல்போன் காெடுக்காமல் கண்டித்துக் கொண்டிருந்தோம். அண்மையில் செல்போன் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
ஆபாச இணையதளங்களை பார்ப்பதற்கும் வயதை நிர்ணயித்து இருந்தாலும், அதனை பார்க்க எந்த தடையும் இல்லாத சூழலே உள்ளது. எனவே வீட்டில் செல்போன் பயன்படுத்தும் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். அதே நேரத்தில் கண்காணிக்கிறோம் என்பது தெரிந்தாலே பிள்ளைகளிடம் கோபம் உண்டாகும். அதேபோல பல வீடுகளில் படித்து அதிக மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற மன அழுத்தம் கொடுக்கப்படுகிறது. படிப்பதற்கு தொடர்ந்து நேரத்தை செலவிடுவதால், விளையாடுவதற்கு நேரமே கிடையாது.