தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிரானைட் குவாரிகள் டெண்டர் நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி! - krishnagiri granite issue

சென்னை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 18 கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகளை தொடர தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

e
ec

By

Published : Nov 9, 2020, 2:06 PM IST

காங்கிரஸ் எம்.பி. செல்லக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்திருந்தார்.

அதில், "கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர், போச்சம்பள்ளி, தேன்கனிக்கோட்டை ஆகிய தாலுகாகளுக்கு உட்பட்ட 18 கிராமங்களில் கருப்பு, சிவப்பு, சாம்பல் நிற கிரானைட் குவாரிகளை அமைப்பதற்கான ஏலம் மற்றும் டெண்டர் அறிவிப்பை மாவட்ட ஆட்சியர், அக்டோபர் ஒன்பதாம் தேதி அறிவித்தார். கிரானைட் எடுப்பதற்கு மத்திய சுரங்கங்கள் துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், அதன் பின்னர்தான் மாநில அரசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் விதிகள் உள்ள நிலையில், அப்படிப்பட்ட அனுமதிகளை பெறாமல் பிறப்பிக்கப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். சுற்றுச்சூழல் தடையில்லா சான்றிதழ் பெறாமல், வழிகாட்டுதல்களுக்கு முரணாக வெளியிடப்பட்டுள்ள இந்த டெண்டர் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று, இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனோகர், மனுதாரர் முன்கூட்டியே வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், உரிய அனுமதி வாங்க தமிழ்நாடு அரசுக்கு கால நிர்ணயம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, டெண்டர் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தொடரலாம் என்றும், ஆனால் அந்த இடங்களை ஒப்படைக்கக்கூடாது என்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை டிசம்பர் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

ஏற்கனவே, இதேபோல் தருமபுரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் தொடர்ந்த வழக்கையும், இந்த வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details