தமிழ்நாட்டில் பஞ்சாயத்து சட்டப்படியும், கிராம சபை கூட்ட விதிகளின்படியும் ஜனவரி 26 குடியரசு தினம், மே 1 உழைப்பாளர் தினம், ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு 4 முறை, கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், கடந்த ஆண்டு கரோனா தொற்றை காரணம் காட்டி, அக்டோபர் 2ஆம் தேதி நடக்க இருந்த கிராமசபை கூட்டங்களை ரத்து செய்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.
இதை எதிர்த்து, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.என் நேரு தாக்கல் செய்த மனுவில், சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களுக்கு தேசிய அளவில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால், அச்சட்டங்களுக்கு எதிராக கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றும்படி திமுக தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததாகவும், அதன் காரணமாகவே தமிழ்நாடு அரசு, கிராம சபை கூட்டங்களை ரத்து செய்துள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
அதேபோல, நடிகர் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் மவுரியா தாக்கல் செய்திருந்த மனுவில், கிராமங்களின் நிர்வாகம், வளர்ச்சி திட்டங்கள் குறித்து விவாதிக்க கூட்டப்படும் கிராம சபை கூட்டங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், எந்த முக்கிய காரணமும் இல்லாமல் கிராம சபை கூட்டங்களை ரத்து செய்தது சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.