சென்னை: தமிழக சட்டப்பேரவையில் கடந்த 12ஆம் தேதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கை மீது விவாதத்தின்போது, அத்துறையின் அமைச்சர் செந்தில்பாலாஜி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் குறிப்பாக, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் 5,329 சில்லறை மதுபான விற்பனைக் கடைகளில், 500 சில்லறை மது விற்பனைக் கடைகள் மூடப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், மூடுவதற்கு தகுதியான 500 சில்லறை மதுபானக் கடைகளை கண்டறியும் பணிகள் தொடங்கியுள்ளதாக துறை சார்ந்த அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வருவாய் குறைவாக உள்ள டாஸ்மாக் கடைகள், பள்ளிகள் மற்றும் கோயில்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகள், போதிய இடைவெளியில் இல்லாமல் அருகருகே உள்ள டாஸ்மாக் கடைகள் உள்ளிட்டப் பல்வேறு காரணிகள் அடிப்படையில் சில்லறை மதுக்கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மது பரிமாற சிறப்பு அனுமதி வழங்கி, பின் அதனை வாபஸ் பெற்றது.
இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட அரசிதழ் குறிப்பில், ’வணிக வளாகங்கள் உட்பட மாநாடுகள் நடைபெறும் இடங்கள், கூட்ட அரங்குகள், விருந்து மண்டபங்கள், விளையாட்டு மைதானங்கள் ஆகியவற்றில் மதுபானம் வைத்திருப்பதற்கும், பரிமாறுவதற்குமான சிறப்பு உரிமம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், புதுதில்லி போன்ற சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளவாறு, தமிழ்நாட்டிலும் வழங்கிட 18-3-2023 அன்று அரசிதழில் பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கையில், திருமணக் கூடங்களும், இதர இடங்களும் இடம் பெற்றிருந்தன.
இதுகுறித்து பெறப்பட்ட கருத்துகளை கவனமுடன் பரிசீலித்த தமிழ்நாடு அரசு, தற்போது அவற்றை நீக்கி, வணிக வளாகங்களில் (Commercial Complexes) உள்ள மாநாட்டு மையங்கள் (Convention centres), கூட்ட அரங்குகள் (Conference Halls) ஆகியவற்றில் நடைபெறும் தேசிய நிகழ்வுகள், பன்னாட்டு நிகழ்வுகள், உச்சி மாநாடுகள் மற்றும் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறும் விளையாட்டு மைதானங்கள் / விளையாட்டு அரங்குகளில் அந்த நிகழ்வுகள் நடைபெறும்போது மட்டும் மதுபானம் வைத்திருத்தல் மற்றும் பரிமாறுவதற்கான தற்காலிக உரிமம் வழங்கப்படும்’ என்று திருத்தப்பட்ட அறிவிக்கையினை வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இதுகுறித்து மேற்குறிப்பிட்ட அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்கள், விழாக்கள், விருந்துகள் போன்றவற்றில் மதுபானம் வைத்திருந்து பரிமாறுவதற்கான சிறப்பு உரிமம் வழங்குவதற்கான முறையையும், இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில் நீக்கம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது.
இவ்வாறு, திருமண மண்டபங்கள் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களில் மது பரிமாற சிறப்பு அனுமதி வழங்கி, பின் அதனை வாபஸ் பெற்ற தமிழ்நாடு அரசு, தற்போது 500 டாஸ்மாக் கடைகளை மூடும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கோயில் கருவறை தெய்வங்களை வீட்டின் கருவறைக்கு கொண்டு வந்த கொண்டைய ராஜூ.. சென்னையில் 'சித்ராலயம்' ஓவியக் கண்காட்சி!