சென்னை: அரசுப்பணிகளில் சீர்திருத்தம் செய்வதற்கு எந்தவொரு குழு அமைப்பினும் அதன் பரிந்துரைகள் அரசு அலுவலர்களுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படுத்தாததை உறுதி செய்வதுடன், பணியாளர் சங்கங்களின் கருத்துகளையும் கேட்ட பின்பே அரசு முடிவெடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அரசுப்பணிகளில் சி, டி பிரிவுகளில் 'அவுட்சோர்சிங்' முறையில் பணியாளர்களை நியமனம் செய்வது, பணியாளர்களுக்குப்பயிற்சி, பதவி உயர்வு போன்றவை குறித்து ஆய்வு செய்து அளிப்பதற்கு மனிதவள சீர்திருத்தக்குழுவை ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் எம்.எப்.பரூக்கி, சி.சந்திரமவுலி, தேவ.ஜோதி ஜெகராஜன் உள்ளிட்ட ஐவர் அடங்கிய மனிதவள சீர்திருத்தக்குழுவை 18.10.2022-ஆம் நாளிட்ட 115 எண் கொண்ட அரசாணை மூலம் தமிழ்நாடு அரசு அமைத்து உத்தரவிட்டது. இதற்குப் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுப் பணிகளுக்கான தெரிவுகளை விரைவுபடுத்தவும், செம்மைப்படுத்தவும் மற்றும் அவர்களுக்கான பயிற்சி முறைகளை சீரமைப்பதை முக்கிய நோக்கங்களாகக் கொண்டு, மனிதவள சீர்திருத்தக்குழு 18.10.2022 நாளிட்ட அரசாணை எண் 115-ல் மனிதவள மேலாண்மைத் துறையால் அமைக்கப்பட்டுள்ளது.