பொது நூலகத்துறை இயக்குநர் குப்புசாமி நூலக அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ”தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நூலகங்களை நிலையான இயக்க செயல் முறைகளை பின்பற்றி செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறப்பதற்கு அரசு ஆணையிட்டுள்ளது.
கன்னிமாரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேர கிளை நூலகங்கள் ஆகியவற்றில் நூல் வழங்கும் பிரிவு, குறிப்புதவி நூல்கள் பிரிவு, சொந்த நூல் படிக்கும் பிரிவு ஆகியவை காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை அனைத்து பணி நாட்களிலும் வாசகர்கள் பயன்பாட்டிற்கு செயல்படுத்த வேண்டும். மற்ற பிரிவுகளை திறக்க அனுமதி இல்லை.
கிளை நூலகங்கள் மற்றும் ஊர்ப்புற நூலகங்களில் நூல்கள் வழங்கும் பிரிவை மட்டும் வழக்கமான பணி நேரங்களில்(மதியம் 2 மணி வரை) அனைத்துப் பணி நாள்களிலும் செயல்படுத்த வேண்டும்.
நூலகங்களை வாசகர்கள் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் பயன்பாட்டிற்கு செயல்படுத்தும் வகையில் நூல் அடுக்குகள், நாற்காலிகள், மேஜைகள், கதவுகள், ஜன்னல், மாடிப்படி, கைப்பிடிகள், வாகன நிறுத்துமிடங்கள் அனைத்தையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
தினமும் நூலகங்களை மூடுவதற்கு முன்னர் வாசகர்கள் பயன்படுத்திய பகுதியினை கிருமி நாசினி கொண்டு முழுமையாக தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பின்னரே மறுநாள் வாசகர்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
கட்டுப்பாட்டு மண்டலங்களில் அமைந்துள்ள நூலகங்களை திறக்க அனுமதி இல்லை. மேலும் கட்டுப்பாட்டு மண்டலங்களில் இருந்து வரும் வாசகர்களை நூலகத்தை பயன்படுத்த அனுமதிக்க கூடாது.
65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பல்வேறு நோய் பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளை நூலகத்தை பயன்படுத்த அனுமதித்தல் கூடாது.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்த பின்பே அனுமதிக்க வேண்டும்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் நூலக பணியாளர்கள் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்த பின்னரே நூலகத்திற்குள் அமைத்தல் வேண்டும்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் உட்பட அனைவரையும் வெப்பமானி கொண்டு பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும்.
நூலகத்திற்குள் வருபவர்கள் ஆறு அடி இடைவெளியுடன் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வருவதற்கு ஏதுவாக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.