சென்னை:அடுத்த குரோம்பேட்டை நெமிலிச்சேரி ஏரியை ஆக்கிரமித்து ஏராளமானோர் கட்டிடங்கள் கட்டி உள்ளதாகவும், ஏரிக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளதாகவும் வந்த புகாரை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரித்தது. பின்னர், இங்குள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித் துறையின் நீர்வள ஆதாரத்துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி, நீர் வள ஆதாரத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நெமிலிச்சேரி ஏரியை 528 பேர் ஆக்கிரமித்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களின் விளக்கத்துக்கு பின்பு சட்டத்துக்கு உட்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள கோவளம் வடிநில கோட்டத்துக்கு உட்பட்ட ஏரிகளின் ஆக்கிரமிப்பை அகற்றி அவற்றை பாதுகாக்கும் வகையில் ஏரியின் கரையோரங்களில் 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்லுயிர் பெருக்க பூங்கா அமைக்கவும், பல்வேறு வகையான மரங்களை நடவும் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.