தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மெட்ரோ ரயில் திட்டம்: ஆதிதிராவிடர் நத்தம் நிலம் தொடர்பாக நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - land owners

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் ஆதிதிராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ், காலி செய்யும்படி தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Mar 16, 2023, 6:30 AM IST

சென்னை:சென்னைமெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூந்தமல்லியில் 456 சதுர மீட்டர் நிலத்தை எடுக்க முடிவு செய்யப்பட்டது. ஆதி திராவிடர் நத்தம் நிலமான அந்த நிலத்தை காலி செய்யும்படி, அங்கு வீடு கட்டி வசித்து வந்த சாக்ரடீஸ் உள்பட 5 பேருக்கு தாசில்தார் உத்தரவு பிறப்பித்தார். இதை எதிர்த்து சாக்ரடீஸ் உள்பட ஐந்து பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்குச் சொந்தமான நிலமல்ல எனவும் அந்த நிலத்தில் வசிக்கும் மனுதாரர்களை காலி செய்யக் கூறி, தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் பொது பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படுவதால் உரிய இழப்பீடு தரும் பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக இருப்பதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு மற்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில், குறிப்பிட்ட அந்த நிலம் ஆதி திராவிடர் நத்தம் நிலமாக இருந்தாலும், மனுதாரர்களுக்குப் பட்டா ஏதும் வழங்கப்படவில்லை. நத்தம் நிலத்தில் வீடுகள் கட்டி குடியிருக்க மட்டுமே முடியும் என்ற நிலையில் கடைகள் கட்டி மாதம் 70 ஆயிரம் ரூபாய் பெற்று நிலத்தை வணிக பயன்பாட்டுக்குப் பயன்படுத்துவதால் நிலத்தில் இருந்து மனுதாரர்களை வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் எனவும், நிலத்துக்கு இழப்பீடு வழங்கப்பட மாட்டாது என்றும் தமிழக அரசு மற்றும் மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆதி திராவிடர் நத்தம் நிலத்தில் அரசுக்கு எந்த உரிமையும் இல்லை என்பதால் அந்த நிலத்தில் வசித்தவர்களை, ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் வெளியேற்ற முடியாது எனக் கூறி, நிலத்தை காலி செய்யும்படி தாசில்தார் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

அதே சமயம், நிலத்தை மெட்ரோ ரயிலுக்காக வழங்க தயாராக இருப்பதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளதால், உரிய இழப்பீட்டை வழங்கி நிலத்தை அரசும், மெட்ரோ ரயில் நிர்வாகமும் பெற்றுக் கொள்ளலாம் எனவும் உரிய சட்ட விதிகளை பின்பற்றி அரசு, அந்த நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க:இந்த ரகசியத்தையா இவ்வளவு நாளா வைத்திருந்தார்? - வானதி சீனிவாசன் கேள்வி

ABOUT THE AUTHOR

...view details