ராணிப்பேட்டை:நாட்டு பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியை அமைச்சர் ஆர்.காந்தி இன்று (நவ.14) நேரில் சென்று வழங்கினார். கலவை அடுத்த மாம்பாக்கம் பகுதியில் கடந்த 12ஆம் தேதி விக்னேஷ் என்பவர் தனது தம்பியின் 4 வயது மகளான நவிஷ்காவை தூக்கி வைத்தபடி நாட்டு பட்டாசு வெடித்து, தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அப்பொழுது, எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பட்டசு வெடி விபத்தில் 4 வயது சிறுமி நவிஷ்கா பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் நவிஷ்காவை தூக்கி வைத்திருந்து சிறுமியின் பெரியப்பா விக்னேஷுக்கு இடது கையில் நான்கு விரல்கள் சிதறிய நிலையில், தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்த 4 வயது சிறுமியான நவிஷ்காவின் குடும்பத்தினருக்கு 3 லட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விக்னேஷ் குடும்பத்தினருக்கு ஒரு லட்சம் ரூபாயும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.