சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரமணி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள ஸ்ரீ ராம் சாமாஜ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி 1987ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகின்றது. இப்பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், அரசு வழங்கிய அங்கீகாரம் கடந்த 2012 ஆண்டு மே 31 ஆம் தேதியுடன் முடிவடைந்துள்ளது.
அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் பள்ளியின் மூன்று மாடி கட்டிடமும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதாகவும், தீயணைப்புத்துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் தடையில்லா சான்று பெறாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகள் கல்வி கட்டண குழு நிர்ணயித்த கட்டணத்தை விட கடந்த 2010 ஆம் முதல் 2013ஆம் ஆண்டு வரை ரூ.1 கோடியே 68 லட்சம் கூடுதலாக கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. இது முற்றிலும் விதிகளுக்கு முரணாக இயங்கி வரும் ஸ்ரீ சீதாராம் பள்ளியின் தற்போதைய கட்டிடமும் மிக மோசமான நிலையில் உள்ளதால், பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாகவும் கூறியுள்ள மனுதாரர். அடுத்த கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.