சென்னை: அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், "பொங்கல் வாழ்த்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரிவித்தோம். நேற்று சட்டப் பேரவையில் ஆளுநரின் சட்டவிரோதச் செயலுக்கு எதிர்வினை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செயல் போற்றுதலுக்குரியது.
ஆளுநரின் செயல்பாடு என்பது மாநில அரசுக்கும், இன்றைய அரசுக்கும் உள்ள முரண்பாடு. ஆளுநர் உணர்ச்சிவசப்பட்டு இதை செய்யவில்லை. திட்டமிட்டு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென செய்துள்ளார். ஆளுநர் ஒப்புதலோடு அச்சிடப்பட்ட உரையை சில வார்த்தைகளை தவிர்த்து இருப்பது என்பது சங் பரிவார் செயல்பாடுகளில் ஏற்கனவே உள்ளது என்பதை உணர்த்துகிறது. ஏற்கனவே ஆளுநர் ரவி, ஒரு மாநிலத்தில் ஆளுநராகவும், பாதுகாப்புத் துறையில் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். ஆளுநர் என்பவர் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். அவரது அனைத்து செயல்பாடுகளும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளது.
முதலமைச்சர் சட்டப்பேரவையில் செயல்பட்ட விதம் அவரது ஆளுமையை வெளிப்படுத்தியுள்ளது. இதற்கு அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலமைச்சரின் இந்த செயல்பாடுகளுக்கு வலுசேர்க்கும் விதமாக ஆளுநரை கண்டித்து வருகின்ற ஜனவரி 13ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்த இருக்கிறோம். இந்தப் போராட்டத்தில் அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.