தமிழுக்கு மணிமகுடம்; தமிழ்நாட்டில் மற்றொரு மொழியை கற்றுக்கொள்ளுங்கள் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சென்னை: பீர்க்கன்கரணை, ஸ்ரீராம் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். பள்ளியில் இன்று (ஜன.9) நடந்த ஆண்டு விழா மற்றும் புதிய கட்டடம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.
அப்போது நிகழ்ச்சியில் பேசிய அவர், சில மாணவர்களை மேடைக்கு வரச்சொல்லி அழைத்து, அவர்களை கேள்வி கேட்கச் சொல்லி அவர்களுக்கு பதிலளித்தார். நன்கு படிக்கவும், விளையாடவும், அன்றைய பாடங்களை அன்றைய தினமே படிக்கவும், அம்மா, அப்பா, ஆசிரியர் சொல்வதை கேட்கவும் என பாரதியின் பாடல்களை மேற்கோள் காட்டி அறிவுரை வழங்கினார்.
மேலும் பேசிய அவர், 'யோகா அனைவரும் செய்ய வேண்டும். பாரதப் பிரதமர் மோடி (PM Modi) அவர்கள் நாம் எல்லாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஜூன் 21ஆம் தேதி யோக தினமாக (International Yoga Day) கொண்டாட வைத்திருக்கிறார்கள். அதனால், பாரதப் பிரதமருக்கு பெரிய நன்றியினை தெரிவித்துக்கொள்ள வேண்டும்.
இஸ்லாமிய நாடுகள் கூட, யோக தினத்தைக் கொண்டாடுகிறார்கள். உடல் நலம் நன்றாக இருந்தால் தான் நாம் எல்லாம் நன்றாக இருக்க முடியும். நாம் தமிழை படிக்க வைப்பது கிடையாது; 'தமிழ்' (Tamil) படிக்காமலேயே என்னை மாதிரி டாக்டராக படித்த காலம் எல்லாம் தமிழ்நாட்டில் இருக்கு. ஆனால், இன்றைக்கு 'தமிழா? தமிழகமா? தமிழ்நாடா?' என்று கேள்வியில் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் தான் நம்முடைய உயிர். தமிழ் எல்லா பள்ளிகளிலும் தவழ வேண்டும், அரசியல் மேடைகளில் தவழ்கிறதே தவிர, வகுப்பறைகளின் பள்ளிகளில் தவழவில்லை. ஆகவே, வகுப்பறைகளிலும், மேடைகளிலும், குழந்தைகளின் நாவிலும் தமிழ் தவழ வேண்டும்.
தமிழுடன் இன்னொரு மொழி: இந்தி (Hindi) பாடல் சொல்லிக் கொடுக்கிறோம் என தைரியமாக சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையில் (National Education Policy) இன்னொரு மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் தமிழை படித்துவிட்டதோடு சேர்ந்து இன்னொரு மொழியை கற்றுக்கொள்ளலாம். ஆனால், இன்று தமிழ் தான் வேண்டுமென்று சொல்லிக் கொள்பவர்கள் தமிழைப் படிக்காமல் கூட, தமிழ்நாட்டில் உயர்கல்வி வரைக்கும் படித்துவிடக்கூடிய சூழ்நிலை இருந்தது என்பதை மறந்துவிடக்கூடாது. ஆக, இன்னொரு மொழி படிப்பதற்கு அந்த குழந்தைக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்.
3 வயது குழந்தைக்கு 8 வயது வரைக்கும் எத்தனை மொழிகளை சொல்லிக் கொடுத்தாலும், கிரகித்துக் கொள்ளக்கூடிய மூளை அந்த குழந்தைக்கு இருக்கிறது. ஆக அதைப் பயன்படுத்துங்கள். குழந்தை படிக்கிறேன் என்கிறது. நீங்கள் படிக்க மாட்டேன் என்று சொல்றீங்க, படிக்க விடமாட்டேன்னு என்று சொல்றீங்க, ஆக அப்படி இல்லாமல் அவர்கள் படிக்க விரும்பினால், வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். உடனே திணிப்பதாக எங்கள் மீதே குறை சொல்வீர்கள்.
பள்ளி விழாவில் இந்தி ரைம்ஸ்:குழந்தைகள் படிக்க ஆசைப்பட்டால் பெற்றோர்கள் படிக்க ஆசைப்பட்டால் மொழிகளையும் கற்றுக்கொடுங்கள். சின்ன வயதில் எவ்வளவு கற்றுக்கொள்ள முடியுமோ? அவர்கள் கற்றுக்கொள்ளும்போது அவர்களுக்கான வாய்ப்புகள், வசதிகள் பெருகுகிறது’ என்றார். அப்போது மேடையில் இருந்த சிறுவனை தமிழ்ப் பாடல், இந்தி ரைம்ஸ் பாடச் சொல்லி கேட்டார்.
'இந்த குழந்தை தமிழும் படிக்கிறாள்; தமிழும் படித்துக்கொண்டு வேறுமொழியும் படித்துக்கொண்டு, இன்னொரு மாநிலத்திற்கு போய் தமிழ்மொழியுடைய நல்லதை இந்தி தெரிந்த ஒருத்தருக்கு இவளால் சொல்லிக் கொடுக்க முடியும். என் தமிழ் மொழியின் வலிமையை மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டும் என்றால் இன்னொரு மொழியை படிப்பது தவறில்லை.
உலக அரங்கில் கொண்டு சேர்க்கும்: மேடையில் தமிழிசையை இந்தியில் பாட வைத்தார்கள். தமிழுக்கு எதிராக இருக்கிறார்; அவர் தமிழிசை இல்லை; இந்தி இசை. அப்படின்னு கேட்டை தாண்டுவதற்குள் 200 ட்வீட் வந்திரும். நான் அதைப்பற்றி கவலைப்படவில்லை. வருங்கால சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்கு எந்த விமர்சனங்களையும் தாங்கிக்கொண்டு இந்த சமுதாயம், உலக அளவில் புதிய கல்விக் கொள்கையை வகுப்பறையில் இருந்து உலக அரங்கிற்கு எடுத்துச்செல்வார்கள். அதனால், உங்கள் அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு அவசியத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.
தமிழுக்கு பாதிப்பு வரக்கூடாது:என் தமிழ்மொழி எந்த விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் நாம் கவனமாக இருப்போம். தமிழ் என் பெயரில் மட்டும் இல்லை. என் உயிரிலும் இருக்கிறது. என் தமிழ்மொழியின் நல்லவற்றை மற்ற மாநிலங்களில் புரிந்துகொள்ளும்படி, சொல்ல வேண்டுமென்றால் நாம் மற்றமொழிகளை கற்றுக்கொள்ள வேண்டும். தாய்மொழி என்கிறோம். ஆனால், தமிழைப் பிழை இல்லாமல் எத்தனை பேர் பேசுகிறோம் என்று தெரியாது. புதிய கல்விக் கொள்கை சொல்வதைப்போல, மற்ற மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்’என்றார்.
தமிழ்மொழிக்கு மகுடம்:இறுதியாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், 'இன்னொரு மொழி தெரிந்தால், இன்னொரு வாய்ப்பு கிடைக்கும், அது தாய் தமிழ் மொழிக்கு மகுடம் சேர்க்கும். இதை அரசியல் ஆக்காதீர்கள், தமிழுக்கு முதல் மரியாதை, பிரிவினை கருத்துகள் வரும்போது தனிநாடு ஆகிவிட கூடாது. அதற்காகத் தான் தன்னாடு என்ற உணர்விருக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு எது நல்லதோ அதை செய்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்.
புதுச்சேரியில் அப்படிதான். அதனால் தான் சிபிஎஸ்சி, பாடத்திட்டத்தை கொண்டு வரப்போகிறோம். அனைவருக்கும் சமமான கல்வி, இப்போது வசதியானவர்களுக்கு ஒரு கல்வி, வசதியற்றவர்களுக்கு ஒரு கல்வி இல்லாமல், எல்லோருக்கும் சமமான கல்வி, அதுதான் தேவை சமச்சீர் கல்வி' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'திராவிட மாடல்' வார்த்தை தவிர்ப்பு.. சட்டப்பேரவையில் பாதியில் வெளியேறிய ஆளுநர்!