ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பு சென்னை:வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் 200 ரூபாயும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பில் பெறும் சிலிண்டர்களுக்கு 400 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் நன்றி தெரிவித்தார்.
முன்னதாக, தெலங்கானாவில் உள்ள ராணுவ வீரர்களுக்கு ரக்ஷா பந்தன் கயிறுகளை கட்டி வாழ்த்துகளை தெரிவித்ததாக கூறிய அவர், அனைவருக்கும் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை கூறினார். தற்போது எதை செய்தாலும் விமர்சனங்கள், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை எனவும், உடனடியாக, எதிர்கட்சிகள் தேர்தல் வருவதை காரணம் காட்டி இந்த சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அவர் கூறியுள்ளார். தனது கூட்டணியில் உள்ள கர்நாடக அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை வாங்கித் தர முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் தமிழிசை கோரிக்கை வைத்துள்ளார்.
மும்பைக்கு 'இந்தி தெரியாது போடா' என்ற டீ-சர்ட்டுடன் செல்வார்களா? நமது மாநிலத்திற்கும், பக்கதில் உள்ள மாநிலத்திற்கும் தேவையான காவிரி நீரையே பெற்றுத்தர முடியவில்லை என்றால், இந்தியா முழுவதும் சென்று என்ன சாதிக்க போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்றார்.
தமிழக முதலமைச்சர், கர்நாடகா முதலமைச்சர் உடன் பேச முடியாதா? ஒரு விடியலை டெல்டா விவசாயிகளுக்கு தர முடியவில்லை என்றால், அது எந்த மாதிரியான விடியல் என்று எனக்கு தெரியவில்லை என்றும், மகாராஷ்டிராவிற்கு கூட்டணி ஆட்சி கூட்டத்திற்கு எப்படி போவார்கள், 'இந்தி தெரியாது போடா' என டீ-சர்ட் அணிந்து செல்வார்களா என கேள்வி எழுப்பினார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், 'எதை செய்தாலும் ஒரு தொலைநோக்கு பார்வையுடன் மேற்கொள்ள வேண்டும். மாணவர்களின் உயிருடன் விளையாடுகிறார்கள் என்பது எனது கருத்து. பல லட்சம் பேரிடமிருந்து கருத்துக்களை வாங்கி, இந்த புதிய கல்விக் கொள்கை நமக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், மாணவர்கள் அறிவாளியாக வெளிவருவதை நீங்கள் விரும்பவில்லையா என கேட்கத்தான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் அரசியலாகப் பார்த்து ஒரு நல்ல விஷயத்தைக் கூட எடுத்துக் கொள்ளக்கூடாது என்பது வேதனை அளிக்கக்கூடியதாக இருக்கிறது என்பது எனது கருத்து.
நீட் தேர்வால் மருத்துவ கல்வி வியாபாரமாவது தடுக்கப்பட்டுள்ளது: மருத்துவ கல்வி வியாபாரமாகக் கூடாது என்பதற்காகத்தான் நீட் தேர்வு (NEET Exam) வந்தது. நான் தனியார் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றியுள்ளேன். அரசு மருத்துவக் கல்லூரியிலும் படித்துள்ளேன். நீட் கல்வி முறையின் மூலம் மருத்துவக் கல்வி முற்றிலும் வியாபாரம் ஆக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரியை நடத்துபவர்கள், அவர்களுக்குத் தேவையானவர்களை, உறவினர்களை மருத்துவம் படிக்க அனுப்புவார்கள். அவர்கள் குறைந்த அளவு மதிப்பெண்ணுடன் மருத்துவம் பயில வந்து, எந்த அளவிற்கு கடினப்படுகிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தவள். அதனால்தான், நான் நீட்டை முழுமையாக ஆதரிக்கிறேன்.
ஆளுநரை பதவி விலக வற்புறுத்தும் இவர்களுக்கு 'நீட்' பற்றி என்ன தெரியும்?:மருத்துவக் கல்லூரியை பற்றியோ அல்லது மருத்துவம் பற்றியோ எதுவும் தெரியாமல் அதைப் பற்றி பேசுகின்றனர். ஆளுநரை பதவி விலகிக் கொண்டு போட்டியிட வேண்டும் என்று கூறும் இவர்கள், மருத்துவம் பற்றி தெரியாமலேயே நீட் பற்றி பேசுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்? எங்களைப் போன்றவர்கள் மருத்துவக் கல்லூரியைப் பற்றி தெரிந்து கொண்டு நீட்டைப் பற்றி பேசுங்கள் என்று கூறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? ஆகவே, எல்லாவற்றையும் அரசியலாக்கி மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து' என கூறினார்.
இதையும் படிங்க:"ஏய் நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா?" - ஊராட்சி மன்ற தலைவரை மிரட்டும் பெண் காவல் ஆய்வாளர்!