சென்னை: கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டிலுள்ள குடும்பத் தலைவிகளில் தகுதியானவர்களுக்கு காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில், தமிழ்நாடு முழுவதும் உள்ள 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் மகளிர்கள் பயன்பெறும் விதமாக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.15) தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மகளிர்க்கும் எல்லா உரிமையும், உரிமைத் தொகையும் கிடைத்தால் மகிழ்ச்சியே என்றும், தமிழ்நாட்டில் உரிமைத் தொகை பெறும் சகோதரிகள் மகிழ்ச்சி அடைய ஒரு சகோதரனாக தொலைநோக்குப் பார்வையுடன் அன்றே ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்த உரிமைத் தொகையை நேரடியாக வங்கி கணக்கில் செலுத்துவதற்கு முதல் காரணமாக இருந்தவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தான். பாரதப் பிரதமர் மோடி தான் முதன் முதலில் அனைத்து பெண்களுக்கும் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் என்று ஜன்தன் வங்கி கணக்கை தொடங்கி வைத்து, அவர்களை முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றவர்.
ஜன்தன் வங்கிக் கணக்குகளின் மூலம் ஏழை, எளிய மக்களின் வங்கி கணக்குகளில் மத்திய, மாநில அரசின் மானியங்கள் நேரடியாக பரிமாற்றம் செய்யப்படுகின்றன. எனவே, பாரதப் பிரதமருக்கு நம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வோம். பாரத தேசம் முழுவதும் சுமார் 50 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில்,56 சதவீதம் பெண்கள் ஜன்தன் வங்கி கணக்குகளை தொடங்கி உள்ளனர்.
கரோனா தொற்று காலத்தில் ஜன்தன் வங்கி கணக்கு வைத்திருந்த அனைத்து பெண்களுக்கும், 3 மாதம் மத்திய அரசு ரூபாய் 500 உதவித்தொகை அளித்தன. அப்போது, முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்று, அரசு மானியங்களை பெற்ற நாம் இப்போது, எந்தவித சிக்கல்களும் இல்லாமல் நேரடியாக வங்கி கணக்குகளில் பெறுகிறோம். இதுவே, டிஜிட்டல் இந்தியா என தமிழிசை சௌந்தரராஜன் தனது X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மகளிர் உரிமைத் தொகை திட்டம்; காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் துவங்கி வைத்தார்!