சென்னை:சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “அரசியலில் எந்தப் பெண் பாதிக்கப்பட்டாலும் நான் வருத்தம் அடைவேன். சகோதரி சந்திர பிரியங்காவை பொருத்தமட்டில், நான் ஒரு பெண் துணை நிலை ஆளுநர், எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் என்னிடம் கூறியிருக்கலாம். ஆனால், இதுவரை என்னிடம் கூறியது இல்லை.
இன்னும் சொல்லப் போனால் முதலமைச்சருக்கு, பெண் அமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக சந்திர பிரியங்காவுக்கு வாய்ப்பு வழங்கினார். இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்னால் அவருடைய பணியில் திருப்தி இல்லை என தெரிவித்திருந்தார். அப்போதே நான் ஒரு பெண் அமைச்சர்தான் இருக்கிறார், அவர்களை அழைத்து பேசுமாறு கூறினேன்.
ஆனால் முதலமைச்சர் சந்திர பிரியங்காவின் பணியில் திருப்தி இல்லை என்பதன் அடிப்படையில், என்னிடம் அவரை அமைச்சரவையில் இருந்து எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். முதலமைச்சர் அதிருப்தியின் காரணமாக அவர்கள் பணி சரியாக திருப்தியாக இல்லை என்பதற்காகவே மாற்றம் நடைபெறுகிறது.
எனக்கு என்ன வருத்தம் என்றால், சந்திர பிரியங்கா சில காரணங்களைச் சொல்லி இருக்கலாம். ஆனால் சாதி அடிப்படையில் எந்த செயலும் நடக்கவில்லை, முதலமைச்சரை தனது சொந்த மகளாகத்தான் பார்த்தார். அதை நான் பார்த்திருக்கிறேன். பல மூத்த அதிகாரிகள் இருந்தாலும் கூட, பெண்ணுக்கு அங்கீகாரம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஒரு வாய்ப்பு கொடுத்தார்கள். இத்தனை பிரச்னை இருக்கிறது என்றால் என்னை போன்றவர்களிடம் கூறியிருக்கலாம்.
ஜாதி ரீதியாக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டார்கள் என்று என்னிடம் கூறியிருந்தால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆனால் எதுவும் கூறவில்லை. நான் இந்த விவகாரத்தில் செய்ய வேண்டியது ஒன்றுமில்லை. முதலமைச்சராக மந்திரி சபையில் இருக்கும் அவர், கட்சியைச் சார்ந்த ஒரு அமைச்சர் மீது அதிருப்தி கொண்டு அவரை நீக்கி இருக்கிறார்.
புதுச்சேரி ஒரு துணை நிலை மாநிலம். அதனால் இங்கு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் வந்த பிறகுதான் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியும். ஆனால், மாநிலங்களில் அவ்வாறு இல்லை. அரசியலில் ஒரு பெண் எந்த வகையில் வருத்தப்பட்டாலும், அது வருத்தம் அளிக்கக் கூடியதுதான். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்தவில்லை.
வருங்காலத்திலும் ஒரு பெண் என்ற முறையில் நான் தர வேண்டிய ஆதரவு எல்லாம் அளிக்கத் தயாராக இருக்கிறேன். அரசியலில் ஒரு பெண் மேலே வருவது ஒரு சிரமமான காரியம். ஆனால், கிடைக்கின்ற வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு ஆறு மாத காலமாக அவர் துறையில் அதிருப்தி இருந்ததாக முதலமைச்சர் கூறி வந்தார்.
அவர்கள் சொல்லும்போது துணைநிலை ஆளுநர் என்ற வகையில் என்னால் மறுத்து கூற முடியாது. அவர்களை பாதுகாப்பதற்கான முயற்சிகளை நான் மேற்கொண்டேன். சந்திர பிரியங்கா இரண்டு நாளுக்கு முன்பு கூட என்னுடன் இருந்தார். அப்போதும் இயல்பாகத்தான் இருந்தார். அவருக்கு கொடுக்க வேண்டிய மரியாதை எல்லா இடங்களிலும் கொடுக்கப்பட்டது” என்றார்.
தொடர்ந்து, திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சமீபத்தில் நடந்து வரும் வருமான வரித்துறை சோதனை குறித்த கேள்விக்கு, “வருமான வரித்துறைக்கு எந்த இடத்தில் சந்தேகம் இருந்தாலும் விசாரிப்பது இயல்பு. இதற்கெல்லாம் மத்திய அரசை குறை சொல்ல முடியாது.
எங்கெல்லாம் பிரச்னை இருக்கிறதோ அங்கெல்லாம் கண்டிப்பாக சோதனை நடக்கும். அவர்கள் துறை சார்ந்த வேலையை அவர்கள் செய்கிறார்கள். சரியாக கணக்கு வைத்துக் கொண்டால் பிரச்னை இல்லை. சரியாக கணக்கு இல்லாமல் சொத்து இருந்தால்தான் பிரச்னை. மக்களுக்கான பணம் ஒரே இடத்தில் குவியும்போது, இது போன்ற சோதனை தேவைதான். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என பேசினார்.
இதையும் படிங்க: "499 செவிலியர் காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" - பேரவையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!