சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தனது மவுனத்தைக் கலைத்து, தமிழ்நாடு சட்டப்பேரவை இயற்றி அனுப்பியுள்ள மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கக்கோரி பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "நீட் என்னும் கொடுங்கோன்மை, மாணவர்களைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி, பள்ளிக் கல்வியையும், மருத்துவக் கல்வியையும் சிதைத்து, மாநில அரசின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பை நலிவடையச் செய்யும் மிகப்பெரிய வணிகச் சதியின் ஒரு பகுதி ஆகும். வணிக நோக்கத்திற்காக மட்டுமே நீட் மாநிலங்களின் மீது திணிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசமைப்புச் சட்டம்
நீட் தேர்வு மாணவர்களைத் தகுதியும் படுத்தாது, தகுதியானவர்களை மருத்துவக் கல்வியில் சேரவும் விடாது என்பதை நான்காண்டு கால நீட் முறைகேடுகள் நிரூபித்துள்ளது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் கட்டணமில்லாமல் கல்வி பயிலும் வாய்ப்பாக அமைந்துள்ள பள்ளிக் கல்வியைச் சிதைத்து, பயிற்சி மையங்களில் பகடைக் காய்களாக மாணவர்களை நிற்கவைத்து பணம் இருந்தால் மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கும் நீட், கட்டணக் கொள்ளையைத் தடுக்க இயலாது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் வேண்டாம் என்று 2016ஆம் ஆண்டுமுதல் மக்கள் போராடியது மட்டுமல்லாமல், 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் நீட்டை நிராகரித்து பொதுமக்கள் வாக்களித்துள்ளனர்.