சென்னை: கோவை கார் வெடிப்பு தொடர்பாக அவசியமற்ற புகாரை ஆளுநர் ஆர். என். ரவி சொல்லி இருக்கிறார். கோவை வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இந்த காலதாமதம் என்பதுதான் என்னுடைய கேள்வி என்று ஆளுநர் பொத்தாம் பொதுவாக பேசி இருக்கிறார் என முரசொலி விமர்சித்துள்ளது.
இதுகுறித்து அதில், “ஒரு தனியார் நிறுவனம், தனது யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியின் தங்கும் விடுதியை திறந்து வைப்பதற்காக இவரை அழைத்திருக்கிறது. அந்த இடத்தில் போய் இப்படி கேட்டுள்ளார். ஆளுநர் பதவியில் இருப்பவர், அரசிடம் கேள்வி எழுப்பும் முறை இதுதானா? அதுவும் கோவை போன்ற விவகாரத்தில் இப்படிக் கேட்கலாமா?
அதுவும் இவர் ஒரு போலீஸ் அலுவலராக இருந்தவர். அதுவும் உளவுத்துறையில் இருந்தவர். இப்படிக் கேட்பதுதான் இவரது பணிக்காலத்தில் பயன்படுத்திய முறையா? "இந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில் தமிழ்நாடு காவல்துறை சிறப்பாகச்செயல்பட்டது. நான் துணை தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்தபோது 'பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா' என்பது ஒரு தீவிரவாத அமைப்பு என்று எனக்கு தமிழ்நாடு காவல் துறைதான் தகவல் அளித்தது.
அந்த வகையில் நாட்டில் உள்ள காவல் துறைகளில் தமிழ்நாடு காவல் துறை சிறப்பாகச் செயல்படக் கூடியது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்த வழக்கை என்.ஐ.ஏ.வுக்கு வழங்கியதில் ஏன் இவ்வளவு தாமதம் என்பதுதான் என் கேள்வி " என்று பேசி இருக்கிறார்.
"தமிழ்நாடு காவல் துறை சிறப்பாகச் செயல்பட்டது" என்று சொல்லிவிட்டு, 'ஆனால்' போட வேண்டிய அவசியம் என்ன வந்தது ? இந்த சம்பவம் நடந்து ஓராண்டு ஆகிவிட்டதா? ஒரு மாதம் ஆகிவிட்டதா? ஒரு வாரம் ஆகிவிட்டதா? மூன்றாவது நாளே தேசிய புலனாய்வு முகமைக்கு இந்த வழக்கை மாற்றிவிட்டார் முதலமைச்சர். இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? அக்டோபர் 23 அன்று காலையில் சம்பவம் நடந்துள்ளது. அக்டோபர் 26 அன்று காலையில் தேசிய புலனாய்வு முகமைக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதில் எந்த தாமதமும் இல்லை.
- Delhi court complex வெடிவிபத்து நடந்த நாள் 23.12.2021 . என்.ஐ.ஏ.வழக்கு பதிந்த நாள் 13.1.2022
- Bomb explosion at ps khejuri WB வெடிவிபத்து நடந்த நாள் 4.1.2022 என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 25.1.2022
- BOMB explosion at naihati WB வெடிவிபத்து நடந்த நாள் 27.1.2022 என்.ஐ.ஏ.வழக்கு பதிந்த நாள் 8.2.2022
- Low intensity blast in police bazar of Shillong city வெடி விபத்து நடந்த நாள் 30.01.2022 என்.ஐ.ஏ. வழக்கு பதிந்த நாள் 4.3.2022
- Loud explosion at an automobile work shop durtlang வெடிவிபத்து நடந்த நாள் 18.03.2022 என்.ஐ.ஏ.வுக்கு வழக்கு போன நாள் 20.7.2022
இந்த வகையில் பார்த்தால் மூன்று, நான்கு மாதங்கள் கழித்து எல்லாம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளார்கள். ஆனால், இங்கே மூன்றாவது நாளே ஒப்படைத்திருக்கிறது, தமிழ்நாடு அரசு. இதில் என்ன குறை கண்டார் ஆளுநர்? காரில் இருந்த சிலிண்டர் வெடித்து, காருக்குள் இருந்தவர் மரணம் அடைகிறார்.
உடனடியாக அந்த இடத்தில் இருந்த அனைத்துப் பொருள்களும் கைப்பற்றப்பட்டன. அப்போதே, உடனடியாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கூடுதல் டி.ஜி.பி. தாமரைக்கண்ணன், உளவுத்துறை தலைவர் டேவிட்சன் ஆசிர்வாதம் உள்ளிட்ட அனைவரும் கோவைக்கு வந்துவிட்டார்கள். அன்றைய தினமே, அந்த கார் யாருடையது என கண்டறியப்பட்டது. அன்றைய தினமே அந்த நபர் யாரென கண்டறியப்பட்டார். அன்றைய தினமே அந்த நபரின் வீடு சோதனையிடப்பட்டது. அவர் வீட்டில் இருந்த அனைத்துப்பொருள்களும் அன்றைய தினமே கைப்பற்றப்பட்டது.
ஆறு தனிப்படைகள் இதற்காக உடனடியாக அமர்த்தப்பட்டது. அந்த மாவட்டமே போலீஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. எவரும் தப்பிச்செல்ல முடியாத அளவுக்கு தடுக்கப்பட்டார்கள். மாவட்டம் முழுவதும் தற்காலிக சோதனைச் சாவடிகள் அதிகப்படுத்தப்பட்டன. அருகில் இருந்த மாவட்டங்களில் இருந்தும் காவல் அலுவலர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.