சென்னை: சேத்துப்பட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் விஷ்வாஷ் குளோபல் குழு பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து கோடை கால ஆன்மீக இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு சிறப்பித்தார். அதில் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "இன்று உலகம் பௌதிக அறிவின் முன்னேற்றத்தை அதிகம் அனுபவித்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த உலகம் கரோனா பெருந்தொற்று, வறுமை, போர், காலநிலை மாற்ற நெருக்கடி உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. இவை அனைத்தும் பௌதிக புத்தி மற்றும் பகுதி பௌதிக வித்யானின் விளைவுகள் தான்.நாம் இன்று நமது உடல்நிலை சீராக இருக்க பல்வேறு வசதிகளை செய்துக் கொள்கிறோம். ஆனால் நிம்மதி இல்லை. இன்றைய காலத்தில் குடும்பங்களும் மன அழுத்தத்தில் உள்ளன. குடும்பம் உடைந்து வருகின்றது. பெற்றோர்கள் குழந்தைகள் என அனைவரும் ஒரே இடத்தில் ஒன்றாக சேர்ந்து அமர்ந்திருப்பார்கள்.
ஆனால் உடல் அளவில் மட்டும் தான் ஒன்றாக அமர்ந்திருப்பார்கள், மனதளவில் ஒவ்வொருவரும் ஒரு பக்கம் செல்போனில் பிஸி ஆக இருப்பார்கள். எனவே இந்த உலகத்தில் குடும்பங்களும் மன அழுத்தத்தில் தான் உள்ளன. இந்தியா சுதந்திரம் அடைந்த போது இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய ரிஷி அரபிந்தோ ஒரு காலகட்டத்தில் தன் வாழ்நாளை கழிக்க பாண்டிச்சேரிக்கு சென்று விட்டார்.
அவர் உலகத்தை கண்காணிக்க ஆரம்பித்தார் முதல் உலகப்போர் மிகவும் மனித நேயமற்றதாகவும், இரண்டாவது உலகப் போர் அதைவிட மனிதநேயமற்ற போராகவும் இருந்ததை கண்டார். மனிதர்கள் இனத்தாலும், மதத்தாலும் ஒருவரை ஒருவர் மனித நேயமின்றி தாக்கிக் கொள்வதை கண்டு கவலைப்பட்டார். ஆகையால் மனித நேயத்தை வெளிப்படுத்துவதற்காக பெரிதும் போராடினார்.
கடந்த ஆயிரம் வருடங்களாக பாரதம் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. பாரதம் வலிமையாக இருக்க வேண்டும், சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒட்டுமொத்த உலகமும் நமது குடும்பம். இதைதான் ரிஷி அரபிந்தோவும் ஆசைப்பட்டார். பாரதம் அதன் அத்யாத்திரிக் அறிவைக் கொண்டு வலிமையாக இருக்க வேண்டும். பாரதம் வளர வேண்டும். பாரதம் உலகத்தை காப்பாற்ற வேண்டும் என்றார்.
மேலும் இந்திய பாரதம் தான் உலகத்தை காப்பாற்ற முடியும், மனித நேயத்தை காப்பாற்ற முடியும். அதை தான் தற்பொழுது இந்திய பாரதம் செய்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்த இந்திய நாட்டை உலக அளவில் யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தற்பொழுது நாடு பேசும்போது நாட்டின் பிரதமர் உரையாற்றும் பொழுது உலகமே கவனத்துடன் உற்று நோக்குகிறது.