சென்னை:உலக சுற்றுச்சூழல் தினம் வருகிற 5ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி சென்னையை அடுத்த ஆவடிப் பகுதியில் ராணுவப் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. அங்கு தொழிற்சாலையின் வளாகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவி லட்சுமி உடன் சத்கார் பூங்கா பகுதியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து வளாகத்திற்குள் 1000 மரக்கன்றுகள் நடப்படும் எனக் கூறினார். மரம் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக வில்வ மரம் மற்றும் அரச மரக்கன்றை ஆளுநரும், புங்கை மரக்கன்றை ஆளுநரின் மனைவி லட்சுமியும் நட்டனர். இதனைத் தொடர்ந்து, தக்ஷின் பாரத் பகுதியின் லெப்டினன்ட் ஜெனரல் கரன்பீர் சிங் பிரார் ஆளுநருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
இதனையடுத்து, ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்பயிற்சி திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்களின் மனைவிகளுக்கு தையல் இயந்திரங்களை ஆளுநரின் மனைவி லட்சுமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஆவடி ராணுவ தளவாட தொழிற்சாலை நமது நாட்டின் பாதுகாப்பிற்கு குறிப்பிடத்தக்க பங்காற்றி வருகிறது. நமது ராணுவத்தால் நாடு பெருமை கொள்கிறது.
ஒரு நாட்டிற்குத் தேவையான ராணுவ பலத்தின் அறம் மற்றும் தேவை குறித்து திருவள்ளுவர் திருக்குறளில் கூறி உள்ளார். சமஸ்கிருதத்திலும் வலிமையான ராணுவ பலத்தின் தேவை குறித்து கூறப்பட்டு உள்ளது. ஒரு நாட்டில் வலிமையான ராணுவம் இல்லையென்றால், அந்தநாடு எதிரிகளால் சூழப்படும் என சுக்கிராச்சாரியர் கூறி உள்ளார்.
மரம் நடுவது குறித்தும், காலநிலை பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை குறித்தும் கவனத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும். மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளையானது அதிக அளவில் சமூக சேவைகள் புரிந்து வருகிறது. நமது ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மிகுந்த மன அழுத்தமான சூழலில் பணியாற்றி வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகளை அத்தகைய மன அழுத்தம் மிக்க சூழலில் இருந்து வெளிக்கொண்டு வருவது, கையாள்வது குறித்து மாஸ்டர் மைண்ட் அறக்கட்டளை உதவிக்கரம் நீட்டுகிறது. உலகம் அதிக அளவில் காலநிலை மாற்றம் சார்ந்த பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.
நமது தாய் பூமி அதிகளவில் வெப்பமடைந்து வருகிறது. பனிப் பாறைகள் உருகுகின்றன. ஆறுகள் வற்றி வருகின்றன. காடுகள் வறண்டு வருகிறது என்பதெல்லாம் நாம் அறிந்ததே. உலகில் அடுத்த சில பத்தாண்டுகளில் கடல் மட்டம் உயர்வதால், சில தீவு நாடுகள் உலக வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் சூழலில் தங்கள் நாட்களை எண்ணி வருகின்றன.
கடல் மட்டம் உயர்வதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நூற்றாண்டு காலமாக குளிர்பிரதேசமாக இருந்த பகுதிகள் வெப்ப அலைகளை உணர்ந்து வருகின்றன. பாலைவனங்கள் பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகின்றன. காலநிலை மாற்ற பிரச்னைக்கு காரணமான ஏராளமான நாடுகள் வளர்ந்து வரும் நாடுகளைப் பார்த்து ஆற்றல் பயன்பாட்டை குறைக்கச் சொல்லி வலியுறுத்துவது நேர்மையான முறை அல்ல.