சென்னை: தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் சார்பில் இன்று (நவ 25) இந்திய அரசியலமைப்பு சட்ட தின விழா சென்னை பெருங்குடியில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது, "தற்போதைய காலத்தில் எளிய மக்களுக்கு நீதி கிடைப்பது விலை உயர்ந்ததாக உள்ளது. நம் சமூகம் என்பது ஒரு குடும்பமாக இருந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்றாக போராடிய சமூகம் நம் சமூகம். ஆங்கிலேயர்களின் ஆட்சியை நிலைநிறுத்த, நம் சமூகத்தில் மதம், சாதி, மாநிலம் மற்றும் மொழி என பல்வேறு வகைகளில் நம்மிடம் வேற்றுமைகளை உருவாக்கினார்கள்.
இவை அனைத்தையும் கடந்து நாம் சுதந்திரத்துக்காக போராடும் போது, நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்தோம். ஒரு தனித்துவமான சமூகத்தில் நாம் வேற்றுமையில் ஒற்றுமை என்று இருக்கிறோம். தற்போது மொழிவாரிய மாநிலங்களாக பெரிய அளவில் பிரிந்து வைக்கப்பட்டுள்ளோம்.
இவ்வாறு பிரிந்து இருப்பதால், நம்மிடைய வேற்றுமையை ஏற்படுத்தும் பல்வேறு கருத்துகள் அதிக அளவில் பரவி வருகின்றன. ஏன், பள்ளிகளில் மாணவர்களின் தாய்மொழியை கற்றுத்தர வேண்டும் என 30 சதவீத மொழி சிறுபான்மையினர் போராட வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.