சென்னை:ராஜ் பவனில் இன்று (அக்.05) திருவருட்பிரகாச வள்ளலாரின் திருவுருவச் சிலை திறப்பு மற்றும் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்தார். மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும் போது, “தெய்வீகம் பொருந்திய மாபெரும் திருவருட்பிரகாச வள்ளலாரின் சிலை, அவரது 200ஆவது பிறந்த நாள் ஆண்டு விழாவில் வைக்கப்பட்டிருப்பதால் ராஜ் பவன் ஆசீர்வதிக்கப்பட்டிருகிறது. பாரதத்தின் எண்ணம், அடையாளத்தை மிக ஆழமாக கூர்மைப்படுத்திய மாபெரும் தெய்வீக ஆன்மாக்களில் புனித வள்ளலாரும் ஒருவர். அவர் யார் என்பது குறித்தும் அவர் நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பதையும் நம் சமூகம் அறிந்திருக்க வேண்டும்.
'பாரதம்' ஒரு தனித்துவம் வாய்ந்த தேசம் .மேற்கத்திய கருத்தாக்கத்தைப் போல இல்லாமல், ‘பாரதம் ஒரே தேசம் போல இருந்ததை’ அதை நெருங்கி அணுகினால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். காலனித்துவ காலத்தில், மக்கள் தங்களின் சொந்த வேர்களில் இருந்து அறிவுபூர்வமாக அகற்றப்பட்டு, ஆங்கிலேயர்கள் எப்படி நம் நாட்டைப் பார்த்தார்களோ அதே பார்வையுடன் தேசத்தை அணுகத் தொடங்கியிருந்ததை பாபாசாகேப் அம்பேத்கர் அறிந்திருந்தார்.
அதனால் தான், நமது அரசியலமைப்பின் முதல் விதியில், 'பாரதம்' என்று இந்தியாவை விளக்கினார். 'இந்தியா' என்பது மேற்கத்திய பெயர். பாரதத்தை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வெளிப்பட்ட தரிசனத்தின் அடிப்படையில் நமது எண்ணற்ற ரிஷிகள் மற்றும் சித்தர்களால் உருவாக்கிய 'புனித பூமி' என்று அழைத்தார். படைப்பின் ஒருமை, படைப்பின் ஒவ்வொரு கூறுகளிலும் ஒரே தெய்வீகத்தின் இருப்பு பற்றிய அடிப்படை உண்மை நமது வேதங்களிலும் திருக்குறளிலும் நன்கு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
நமது பாரத நெறிமுறைகளில் நன்கு பிரதிபலிக்கும் வெளிப்படை வேறுபாடுகளை நாம் கொண்டிருந்தாலும் ‘வசுதைவ குடும்பகம்’ என்பதற்கேற்ப நாம் ஒரே தெய்வீகத் தன்மையுடன் இணைந்துள்ளோம். இதுபோலவே தமிழில் நாம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று குறிப்பிடுகிறோம். இதை மொழி மற்றும் வெளிப்படுத்துவதில் நாம் வேறுபட்டிருக்கலாம். ஆனால், மையக்கரு ஒன்றுதான். இந்த தனித்துவமான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய உலகளாவிய தரிசனம் 'பாரதம்' என்று அழைக்கப்படும் நிலம் முழுவதும் பரவியுள்ளது. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தின் அங்கம்.