தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி - குடிமைப்பணி தேர்வு

குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோரிடம் ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்துரையாடலில் பேசிய ஆளுநர் ரவி, ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பதவிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் இந்திய குடிமைப் பணிகளுக்குத் தேவை இல்லை எனப் பேசியுள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

By

Published : Jan 10, 2023, 6:42 PM IST

ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு அதிகாரிகள் தான் தேவை; சமூக ஆர்வலர்கள் தேவையில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை:கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை தர்பார் ஹாலில் இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வென்று நேர்முகத்தேர்வை எதிர்கொள்வோருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி 'எண்ணித் துணிக' என்னும் தலைப்பில் நேர்காணலை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்.

இந்திய குடிமைப்பணிகள் தேர்வில் நேர்முகத்தேர்விற்கு தகுதிப்பெற்றுள்ள 60 பேர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இவர்களுக்கான நேர்முகத்தேர்வு வரும் 30ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெற உள்ள நேர்முகத் தேர்வுக்கு தயாராகி வருபவர்களிடம் ஆளுநர் ரவி கலந்துரையாடினார். அப்போது 'உங்கள் நேர்முகத்தேர்வு தேதி பற்றி தெரியுமா?' என்று ஆளுநர் கேட்டதற்கு, 'இந்த மாதம் 30ஆம் தேதி நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது' எனத் தேர்வர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ' இந்த நேர்முகத்தேர்வு உங்களைப் பற்றியது. நீங்கள் எந்த விதத்தில் கேள்வியை அணுகி பதில் அளிக்கிறீர்கள் என்பது பற்றியது. பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்கள், நேர்த்தியாக தயாராகி உள்ளீர்கள். நீங்கள் யாரையாவது பார்த்து பேசும்போது உங்களிடம் சகஜமாகப் பேச தோன்ற வேண்டும். உடைகளை நேர்த்தியாக அணிய வேண்டும். இன்னும் கூட நேரம் இருக்கிறது. உங்களுக்குத் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள்ளுங்கள். ஆண்கள் கோர்ட் சூட் எடுத்திருப்பீர்கள் என நம்புகிறேன். விரைவில் அதனை எடுத்து அணிந்து பழகுங்கள். பெண்கள் எப்படியும் சேலை தான் அணிவீர்கள். சேலை அணியத் தெரியவில்லை என்றால், சீக்கிரம் அதற்கு பழகிக்கொள்ளுங்கள்.

உங்களை முதல் பார்வையில் பார்க்கும்போது Presentableஆக இருக்க வேண்டும். கேள்வி கேட்கப்படும்போது வேகத்துடன் பதில் அளிக்க வேண்டியதில்லை. யோசித்துப் பதில் அளிக்கக்கூடிய கேள்வியைத் தான் கேட்பார்கள். யோசித்து செயல்படுங்கள். முதலில் கேள்வியைக் கவனித்து பதில் அளியுங்கள். வேகமாகப் பதில் அளிக்க வேண்டியதில்லை. உங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நன்றாக கேள்வியை உள்வாங்கிக் கொண்டு பதில் சொல்லவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பார்வை இருக்கும்.

செய்திகளைப் படிக்கும்போது, அது மட்டுமே உண்மை இல்லை என்பதையும், அது வேறு ஒருவருடைய பார்வை என்பதையும் மனதில் கொள்ளவேண்டும். உங்களுடைய எண்ணங்களும், பார்வைகளும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அரசாங்கம் என்ன முடிவு எடுக்கிறதோ, அதனை அமல்படுத்துவது மட்டும் தான் இந்திய குடிமைப் பணி அதிகாரியாக உங்களுடைய கடமையாக இருக்கும்.

இந்திய அரசாங்கத்தின் சட்டத்தை எப்போதும் விமர்சனம் செய்யக்கூடாது. எந்த சட்டமும் 100 சதவீதம் முழுமையானது இல்லை என்பது உண்மை. ஒரு விஷயத்தைப் பற்றி, ஒரு பிரபலம் கருத்து சொல்கிறார் என்பதால் அது உண்மையாக இருந்துவிடமுடியாது. அவர் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும், அது அவருடைய பார்வை அவ்வளவு தான்.

இந்திய குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தான் தேடுகிறது. ஒரு சமூக ஆர்வலர் இந்திய குடிமைப்பணிக்குத் தேவையில்லை. ஒரு விவகாரம் குறித்து என் கருத்தைக் கேட்டால் அதனை நான் தருவேன். ஆனால், இறுதி முடிவு எனது கருத்துக்கு எதிராக இருந்தாலும், அதனை அமல்படுத்துவது தான் என் கடமை. என் கருத்துக்கு எதிராக முடிவெடுத்த மேல் அதிகாரியின் முடிவின் மீது நான் கோபப்பட முடியாது’ எனத் தெரிவித்தார்.

மேலும், 'மாநில அரசு, மத்திய அரசு என்று வரும்போது சந்தேகமே இல்லை; இந்திய குடிமைப் பணிகள் அதிகாரிகள் மத்திய அரசின் மூலம், மத்திய அரசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் மத்திய அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கவேண்டும்.
மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் இடையே நிலவும் விவகாரத்துக்கு கருத்து கேட்கப்பட்டால், மத்திய அரசு வேறொரு விதத்தில் இந்த விவகாரத்தை அணுகுவதால் ஏற்பட்டுள்ள காலத்தாமதத்துக்கு என்ன காரணம் எனத் தெரியவில்லை என்று சொல்லவேண்டும். உச்ச நீதிமன்றம் எடுத்திருக்கும் நிலைப்பாடு தவறு என்றும் சொல்லக்கூடாது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு அரசின் லட்சினையை புறக்கணித்த ஆளுநர்

ABOUT THE AUTHOR

...view details