சென்னை: நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் 9.5 அடி உயரம், 850 கிலோ எடையில் அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் 2ஆவது பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் சிலையை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும்போது, லால் பகதூர் சாஸ்திரி சிலை திறப்பு நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை அளிக்கக்கூடியது. சாஸ்திரியின் எளிமை, தேச வளர்ச்சிக்கான பங்களிப்பு பாராட்டத்தக்கது. புகழ்பெற்ற ’ஜெய் ஜவான், ஜெய் கிஸான்’ முழக்கங்களை தந்தவர். அதன் வரலாறு நமக்கு தெரியாது.
நாடு சுதந்திரமடைந்த பிறகு இந்திய பாதுகாப்புத் துறையின் தேவை கருத்தில் கொள்ளப்படாததால் ஜம்மு மற்றும் காஷ்மீரின் பெரும் பகுதி உள்பட ஒவ்வொரு பிரதேசங்களாக நாம் எதிரிகளிடம் இழந்தோம். ஆக்கிரமிப்பு, ஊடுருவல் ஆகியவை அதிகரித்து தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து நிலவியது. இதேபோல கடும் வறட்சி ஏற்பட்டு, உணவுப் பஞ்சத்தால் நாடு பெரும் இன்னல்களை சந்தித்தது. ஊடுருவலால் நாட்டின் எல்லையிலும், மக்களுக்கு உணவளிக்க முடியாமல் நாட்டிற்குள்ளேயும் நாடு பெரும் அவமானத்தை சந்தித்தது.
லால் பகதூர் சாஸ்திரி பதவியேற்ற பிறகு, பிரதேசங்களின் ஒருமைப்பாடு என்பது இன்றியமையாதது என்பதை வலியுறுத்தி ’ஜெய் ஜவான்’ என்று முழங்கி ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டது. மேலும், 1965 ஆம் ஆண்டு போர் வெற்றிக்கு பிறகு நமது நாட்டின் வலிமையை அனைவரும் உணர்ந்ததாகவும், தொடர்ந்து லால் பகதூர் சாஸ்திரி அமைத்துக் கொடுத்த பசுமை இயக்கம் மூலம், நாட்டில் மக்கள்தொகை உயர்ந்து வந்த போதிலும் நமது உணவுத் தேவையை பூர்த்தி செய்ததோடு, உலகிற்கே உணவை வழங்கி வருகிறோம்.