சென்னை:பல நூறு ஆண்டுகளாக நமது நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி செய்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் பிடியிலிருந்து 'இந்தியா' விடுதலை அடைந்த தினத்தை நாடெங்கும் உள்ள இந்தியர்கள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நாடெங்கும் நமது தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கி நமது சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டவர்களை நினைவுக்கூர்ந்து வருகின்றோம். நாட்டின் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் சுதந்திர தின வாழ்த்துகளை இன்று (ஆக.15) தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேசியக்கொடி ஏற்றிவைத்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், ஸ்ரீஅரவிந்தரின் 151வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தார். நாட்டின் 77வது சுதந்திர தினத்தன்று தமிழ்நாட்டு மக்களின் அனைத்து வளர்ச்சி, விரிவான நல்வாழ்வுக்கு தமது அன்பான நல்வாழ்த்துக்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். மேலும், நமது சுதந்திர போராட்ட வீரர்கள் கண்ட கனவுகளின்படி இந்தியாவை உருவாக்க நம்மை நாமே உறுதி செய்வோம் என ஆளுநர் வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: சுதந்திர தினம் 2023: செங்கோட்டையில் 10வது முறையாக மூவர்ணக் கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி!
இந்த நிலையில், சுதந்திர தினமான இன்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரம்மாண்டமாக நடந்த காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும், சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.