சென்னை:தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் 1987 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சுதா சேஷய்யன் கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதி பொறுப்பேற்றார். அவரது பதவிக் காலம் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இந்த நிலையில், புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பூர்ணலிங்கம் ஒருங்கிணைப்பாளராகவும், மைசூருவில் அமைந்துள்ள ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இணை வேந்தர் டாக்டர் பி.சுரேஷ், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ மையத்தின் இதய நல சிகிச்சைத் துறை இயக்குநர் எஸ்.தணிகாசலம் ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
இதையடுத்து, துணைவேந்தர் பதவிக்கு 37 பேர் விண்ணப்பித்தனர். அதில் 3 பெயரை இறுதி செய்து ஆளுநரின் முடிவுக்கு தேர்வு குழு அனுப்பியது. அதில் ஒருவர் புதிய துணைவேந்தராக நியமிக்கப்படுவார் எனத் தகவல்கள் வெளியாகின.