சென்னை: சென்னையில் இந்தியா, இலங்கை இடையே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச டி20 சீரிஸ் கிரிக்கெட் போட்டியில், முதல் இரண்டு இடங்களில் வென்ற இலங்கை, இந்திய அணி வீரர்கள் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேற்று (பிப்.24) சந்தித்துப் பேசினர்.
முன்னதாக டி20 சீரீஸில் பங்கேற்க இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் மற்றும் இலங்கை மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் வாரியம் ஆகியவற்றின் ஏற்பாட்டின் பேரில் சென்னை வந்த வீரர்கள், ராமச்சந்திரா பல்கலைக்கழக கிரிக்கெட் மைதானத்தில் கடந்த இரு நாட்களாக (பிப்.23, 24) நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றனர்.
இந்த நிலையில் இரு அணி வீரர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை அழைத்திருந்தார். அப்போது தர்பார் மண்டபத்தில் இரு அணிகளைச் சேர்ந்த தலா 18 வீரர்களுடன் ஆளுநர் கலந்துரையாடினார். அந்த நேரத்தில் இரு அணி வீரர்களும் தாங்கள் எதிர்கொள்ளும் சவாலான வாழ்க்கைச் சூழல் குறித்தும், வறுமை நிலையிலும் விளையாட்டு மீதான ஆர்வத்தால் கிரிக்கெட் விளையாட வந்துள்ளதையும் கூறினர்.