சென்னை:வாழ்கையில் வெற்றி மட்டுமே இருக்காது, ஏதேனும் ஒரு இடத்தில் சறுக்கல் இருக்கும். அதில் இருந்து நீங்கள் கற்று கொண்டு மீண்டும் எழ வேண்டும் என்றும் நீங்கள் உயர்ந்தால் உங்கள் குடும்பம் உயரும் அதனால் மாநிலம் உயரும் அதனால் நாடு உயரும் என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் 165 வது பட்டமளிப்பு விழா இன்று (ஆகஸ்ட். 6) நடைபெற்றது. விழாவில் மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பட்டங்களை வழங்கினார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழகத்தில் 1,04,416 பேர் பட்டங்களை பெற தகுதி பெற்று இருந்தனர்.
அவர்களில் 564 பேர் முனைவர் பட்டம் பெற்றனர். இலக்கிய ஆராய்ச்சி படிப்பில் ஒருவரும் பட்டம் பெற்றார். பதக்கம் மற்றும் பரிசு வென்ற 197 பட்டதாரி மாணவர்களுக்கு பட்டங்களையும், பரிசுகளையும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழில் வாழ்த்தி ஆரம்பித்தார். அவர் பேசும்போது, "பாரத குடியரசு தலைவருக்கு வணக்கம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கும் வணக்கம்" என தமிழில் கூறி ஆளுநர் உரையை துவக்கினார்.
அதனைத் தொடர்ந்து பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்களை கூறிய அவர், "இந்தியாவின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள் பயின்ற சென்னை பல்கலைகழகத்தின் தயாரிப்பு நீங்கள் என்பதை நினைவு கொள்ள வேண்டும். சமூகத்தில் உங்களுக்கான இடத்தை நோக்கி நகர உள்ளீர்கள். சமூக தேவை அறிந்து உங்களது துறையில் சிறப்பாக செயல்பட வேண்டும்.