ஆளுநர் பதவியை குரங்கு கை பூமாலையாக்கி விட்டார் ஆர்.என். ரவி சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கினார். பின்னர் சில மணி நேரங்களில் செந்தில் பாலாஜி பதவி நீக்கத்தை மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைப்பதாக திரும்பப் பெற்றதாக முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்தார்.
இந்த நிலையில், இது தொடர்பாக முரசொலியில் வெளியான செய்திக் கட்டுரையில், “அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி ‘ஜனநாயகம் இந்தியா அமெரிக்காவின் மரபணுக்களில் ஊடுருவியது’ என்று பேசி வந்ததின் ஈரம் கூடக் காயவில்லை, அதற்குள் ஜனநாயகப் படுகொலைக்கு வித்திட்டுள்ளார், ஆளுநர் ரவி.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறிப்பிட்டதுபோல மனநிலை சீராக இல்லாதவர் செயல்பாடு போலத்தான் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள் தொடர்கின்றன. பாஜகவின் ஆட்சியில் இந்திய ஜனநாயகத்தின் உயிர் உலக நாடுகளால் விமர்சிக்கப்படும் அளவு, ஊசலாடிக் கொண்டிருக்கிறது. ‘உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு’ என்ற பெருமையை சுக்கு நூறாக்க அத்தனை நடவடிக்கைகளிலும் இறங்கி விட்டது.
அரசியல் சட்டத்தின் அரிச்சுவடியைக் கூட அறியாத ஒரு நபர் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டு, அவர் நடத்தும் ‘கத்துக்குட்டி அரசியல்’ அத்துமீறிக் கொண்டிருக்கிறது. செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை ஒரு வழக்கைப் பதிவு செய்து அதன் மீது நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
அவர் மீது வழக்கு இருப்பதாலும், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாலும் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதாக ஆளுநர் தன்னிச்சையாக அறிவித்துள்ளார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரையோ, முதலமைச்சரால் பரிந்துரைக்கப்பட்ட அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யும் அதிகாரத்தை ஆளுநருக்கு எந்த அரசியல் சட்டப் பிரிவு அளித்துள்ளது என்று ரவி விளக்க வேண்டும்.
ஆளுநர் நினைத்தால் அமைச்சரை நீக்கலாம் என்றால், அதே நிலைதானே முதலமைச்சருக்கும். பின் எதற்கு நாட்டில் தேர்தல், மக்கள் தேர்ந்தெடுக்கும் அவர்களது பிரதிநிதிகள்? செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டவரே தவிர, அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. ஆளுநர் ரவியின் கூற்றுப்படி, கைது செய்யப்பட்டுள்ளவர் அமைச்சராக இருக்கக் கூடாது என்றால், நாளை ஆளுநருக்கோ, மத்திய அரசுக்கோ பிடிக்காத யாரும் அமைச்சராகவோ, முதலமைச்சராகவோ இருக்க முடியாது.
ஒரு நாலு பேரை பிடித்து, ‘இந்த அமைச்சர் மீது ஒரு புகார் கொடு’ என்று கூறிவிட்டு, அந்தப் புகார் மீது வழக்குப் பதிவு செய்து, வழக்குக்கு ஒத்துழைப்புத் தரவில்லை என்று அமலாக்கத் துறையை கைது செய்ய வைத்து, வேண்டாதவர்கள் பதவியைப் பறித்து விட வாய்ப்பு உள்ளது.
உண்மையில் பார்க்கப் போனால், இது அமைச்சர் செந்தில்பாலாஜி மீதோ, திமுக அரசுக்கு எதிராகவோ, கட்டவிழ்த்து விடப்பட்ட நடவடிக்கை அல்ல. தமிழ்நாடு மக்கள் மீதும், அவர்களுக்கு எதிராகவும் யாரோ ஒரு தற்குறியின் அறிவுரையைக் கேட்டு தொடுத்துள்ள போர்.
அரசியல் சட்ட அறிவு சிறிதும் இல்லாத ஒரு நபர், தன்னை ஒரு ஐபிஎஸ் என்று கூறிக் கொள்ளும்போது, உண்மையிலேயே அந்தப் பட்டம் அவர் வாங்கியது தானா என்ற சந்தேகம் வலுப்பதிலும் நியாயம் இருக்கிறது. ஒரு ஆளுநரை வைத்து முதல்வரையோ அமைச்சர்களையோ பதவி நீக்கம் செய்யலாம் என்று அரசியல் சட்டம் விதி வகுத்திருக்குமானால், இந்நேரம் மத்திய அரசுக்கும் மோடி, அமித்ஷா கூட்டத்துக்கும் பிடிக்காத மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், பினராயி விஜயன், சித்தராமையா போன்ற முதலமைச்சர்களின் ஆட்சியைக் கவிழ்த்து சூறையாடியிருக்காதா, மத்திய பாஜக அரசு.
எப்போதோ கொடுத்த புகார், அதுவும் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்ற புகார், அதுவும் செந்தில் பாலாஜி நேரடியாக வாங்கியதாகக் கூறப்பட்ட புகார் அல்ல. செந்தில்பாலாஜி பெயரைச் சொல்லி வாங்கியதாகக் கூறப்பட்ட புகார் வழக்கு என வந்ததும் வாங்கியதாகக் கூறப்பட்ட நபரே, அவரே வாங்கியதைத் திரும்பக் கொடுத்து வழக்கை முடித்துக் கொண்ட விவகாரம். வாங்கியதாகக் கூறப்பட்ட நபர் வாங்கியதைத் திரும்பக் கொடுத்துவிட்டால் அது ஊழல் இல்லையா என்று கேட்டிடத் தோன்றும்.
உண்மைதான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா டான்சி நிலத்தை சட்டத்துக்குப் புறம்பாக வாங்கி அதனைத் திருப்பிக்கொடுத்து விட்டதால் தண்டனை இல்லை என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பு வழங்கிய விவகாரங்கள் உண்டு.
அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் நடந்ததாகக் கூறப்பட்ட சம்பவமோ ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில நடந்த விவகாரம். ஜெயலலிதா மறைந்து ஆறு ஆண்டுகாலம் ஓடி விட்டது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீது அவர் அதிமுகவை விட்டு விலகிய மாதத்தில் வழக்கு. அதுவும் அவர் நேரடியாக சம்பந்தப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கு அல்ல. விசாரணை நிலையில் உள்ள இந்த வழக்கில் கைது என்றார்கள்.
இந்த நிலையில், ஆளுநர் ரவி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகிறார். “உடனடியாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று முதலமைச்சர் உரிய விளக்கம் தந்து விட்டார். குற்றச்சாட்டு உள்ள நிலையில் மத்தியிலும், மாநிலங்களிலும் பாஜக உள்பட பல கட்சியினர் அமைச்சர் பதவியில் இருப்பதைச் சுட்டிக் காட்டினார், உடனே ரவி பதுங்கினார்.
இப்போது மீண்டும் பாய்ந்து, தனது அறிவிலித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டு பின் வாங்கியுள்ளார்.
தேர்ந்த அரசியல் வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் சட்டம் படித்த மேதைகள் அனைவரும், “ஆளுநர் ரவியின் இந்தப் போக்கு, அரசியல் சட்டம் குறித்து அவரது அறியாமையைக் காட்டுகிறது” என்று தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்கள்.
‘சுயபுத்தி இல்லாத பேர்வழிகளுக்கு சொல் புத்தியாவது இருக்க வேண்டும்’ என்பார்கள். இரண்டும் இல்லாத இரண்டாம் கெட்டான்களை ஆளுநர்களாக நியமித்து, ஜனநாயகப் படுகொலைகள் நடத்தப்படுவதை மற்றைய ஜனநாயக நாடுகள் கண்டால் இந்தியாவைப் பற்றி என்ன நினைக்கும்? வெளிநாடுகளில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகக் கருதப்படும் இந்தியாவின் ஜனநாயகத்தை ஆளுநர் ரவி போன்றோர் கேலிக்கூத்தாக்கிக் கொண்டிருப்பதை மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியிடம் கேட்கப்பட்ட இரண்டே கேள்விகளில் ஒன்று, இந்திய ஜனநாயகச் சீரழிவு குறித்தது. விளக்கமாக பதில் அளிக்க இயலாத பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் கூறிய பதிலையொட்டி ‘ஜனநாயகம் எங்கள் மரபணுவில் உள்ளது’ என்றார். ஆளுநர் ரவியின் செயல், பிரதமரின் பதிலை வேரறுக்கவில்லையா? “குரங்கு கையில் பூமாலை” என்பார்களே, ஆளுநர் ரவியையும், அவரது கையிலே சிக்கியுள்ள ஆளுநர் பதவியையும் பார்க்கும்போது நமக்கு அதுதான் நினைவுக்கு வருகிறது.
இதையும் படிங்க:சென்னை திருமங்கலம் சிக்னலில் 'ஜெய் ஸ்ரீராம்' வாசகம்.. காவல் துறை பதில் என்ன?