சென்னை:தமிழகத்திற்கும், காசிக்கும் இடையிலான பல துறைகள் சார்ந்த உறவை, நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில், காசி சங்கமம் என்ற நிகழ்ச்சி, நவம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் இரண்டாவது வாரம் வரை காசியில் நடைபெறுகிறது.
மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், தமிழகத்தில் இருந்து பல்வேறு துறைகள் சார்ந்த 2,500 பேர் பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி குறித்த அறிமுக நிகழ்ச்சி சென்னை ஐஐடி வளாகத்தில் இன்று மாலை நடந்தது.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசும்போது, தமிழகத்திற்கும் காசிக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்கான ஓர் அரிய முயற்சி இது. காசி முதல், ராமேஸ்வரம் வரை ஏராளமான சத்திரங்கள் கட்டப்பட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு மேற்பட்டது காசி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் இடையிலான பாரம்பரிய கலாச்சார உறவு. ஆன்மீக புரிதலோடு ஏராளமான பயணிகள் அங்கிருந்து இங்கு வருவதும், இங்கிருந்து அங்கு செல்வதும் நடைபெற்று இருக்கிறது. சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும், தொல்காப்பியத்திலும் காசிக்கும், ராமேஸ்வரத்திற்கும் மதுரைக்கும் இடையிலான தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
பல நூற்றாண்டு பழமையான வரலாற்றை அனைவருக்கும் மறு அறிமுகப்படுத்தப் பிரதமர் மோடி எடுத்த தைரியமான முடிவு இது, இதில் எந்த விதமான அரசியலும் கிடையாது எனக் குறிப்பிட்டார். மேலும் பாரதம் என்பது ரிஷிகளாலும், சனாதன சக்திகளாலும் கட்டமைக்கப்பட்டது என்றும் ஆளுநர் ரவி தெரிவித்தார்.
இந்த விழாவில் பங்கேற்றுப் பேசிய ஆற்காடு இளவரசர் திவான் அலி, பல மதங்கள், பல வழிபாடுகள் இருந்தாலும், அனைவரும் கடவுள் ஒருவரை வணங்குகின்றனர் என்றும், நாட்டில் பெரும்பான்மையாக உள்ள மக்கள், சிறுபான்மை மக்களை எப்போதும் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஐஐடி இயக்குனர் காமகோடி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:தமிழ்நாடு மீனவர்கள் கைது; வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்