சென்னை:நாட்டின் விடுதலைக்காக முக்கிய பங்காற்றிய சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்சின் 126-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி தலைமை ஏற்று நடத்திய பெருமைக்குரியவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவர் நாட்டிற்கு ஆற்றிய தொண்டை நினைவு கூர்ந்து போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் பராக்கிரம திவாஸ் என்ற பெயரில், தேசிய வல்லமை தினமாக மத்திய அரசால் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சென்னை கிண்டியில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 126-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி கலந்து கொண்டு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உடன் இந்திய இராணுவ படையில் பணியாற்றியவர்கள், தங்களின் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
பெண்கள் படை பிரிவில் 15 வயதில் கலந்து கொன்டு 2 ஆண்டுகள் பணியாற்றிய லட்சுமி கிருஷ்ணன் நாயுடு, துணை நிலை ராணுவ அதிகாரியாக பணியாற்றிய மாதவன் உள்ளிட்டவர்கள் பேசினர். பின்னர் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசும்போது, "இந்தியாவின் சிறந்த மகன் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம் இன்று. இந்த தினம் மிகவும் தனித்துவம் மிக்க நாள். நாட்டின் சுதந்திரத்திற்காக நேதாஜியின் தலைமையின் கீழ் பணியாற்றி, மிக சிறந்த பங்காற்றிய வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.
பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எண்ணற்ற கதாநாயகர்களை பற்றி பிரச்சாரம் செய்து வருகிறார். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு விடுதலை போராட்ட வீரன் இருக்கிறார். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்து உள்ளனர்.
நாம் நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய எந்த ஒரு வீரரையும் மறந்து விட முடியாது. சுதந்திரம் நமக்கு எளிதாக கிடைத்துவிடவில்லை. அத்தகைய சுதந்திரதிற்காக சண்டையிட்டவர்களை, நாம் எவ்வாறு ஒதுக்கி வைக்க முடியும், எவ்வாறு மறக்க இயலும். சுதந்திரம் கிடைத்த பிறகு, நம் நாட்டில் நாம் நமது ராணுவத்தை ஒதுக்கி வைத்தோம்.
பாரத பிரதமர் 21 பரம் வீர் சக்ரா விருது பெற்ற வீர்களின் பெயர்களை பெயரிடப்படாத அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சூட்டியுள்ளார். நான் தமிழ்நாட்டிற்கு வந்தவுடன் சுதந்திரத்திற்காக போராடிய தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்றும், அவர்கள் யார் என்றும் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டேன். அப்போது என்னிடம் 200 நபர்கள் பற்றி கூறினார்கள், அவர்கள் எல்லாம் தலைவர்கள் அதைவிட களத்தில் நின்று போராடிய நிறைய சுதந்திர போராட்ட வீரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
நாம் சுதந்திரதிற்கு போராடிய அனைத்து தியாகிகள் பற்றியும் ஆவண படங்கள் தயாரித்து சேகரித்து வைக்க வேண்டும். அதிலும் இன்று வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை பற்றிய விவரங்களை நாம் சேகரித்து வைக்க வேண்டும். 1947 ல் இங்கிலாந்து நாட்டை விட்டு வெளியேற காரணம் என்ன? என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாததை உணர்ந்தார்கள். இந்தியாவில் தங்கி இருந்த இங்கிலாந்து குடும்பத்தினர், இந்திய ராணுவம் மற்றும் காவல்துறை இரண்டின் மீதும் நம்பிக்கை இழந்தனர்.